பக்கம்:நூறாசிரியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

நூறாசிரியம்

அமைச்சர்க்குற்ற கடமையாலும், ஊதியம் பெறும் கருத்தாலும், அரசன் நெறிபிழைத்தல் குடிபிழைத்தலுக்குக் கரணியமாகு மென்றுணர்ந்து, முன்கூட்டியே அவர்க்கு அறிவுரைத்தல் இயல்பாம் என்க.ஆனால் இவரோ, தாம் குடிகளுள் ஒருவராகி, ஊதியமும் அதன் மேற் கடமையும், பெறவும் பேணவும் அல்லவராயிருந்தும், அவ்வாறு பிழைத்தொழுகும் பேதைமையை இடித்துரைக்கும் தன்மையினராய் இருத்தலின் அவ் வமைச்சரினும் குடிகளின் நலனோம்பும் நாவினர் எனலாயிற்று.

நுரைப்பஞ்சின் நரைதாங்கி - நுரைபோலும் மென்மையும், பஞ்சு போலும் வெண்மையும் சார்ந்த நரைமுடியைத் தாங்கி

அரியேறு - அரிமாவின் ஏறு.

அணல்- தாடி முகவாயின் தோன்றிய மீசையும் தாடியும்.

நெறியாற்றின் நெஞ்சு படர - நெறிமுறைகளை வழிப்படுத்தும் நினைவு சான்ற நெஞ்சின்மீது படர்ந்து புரளும்படி

பாடியும்...நகரமும் - முல்லை நிலத் தூர்களாகிய பாடியும் சேரியும், நெய்தல் நிலத்துரர்களாகிய பட்டினமும் பாக்கமும், மருதநிலத்து ஊராகிய, ஊரும் குறிஞ்சி நிலத்தூராகிய குடியும் ஆரவாரமிக்க நகரமும்,

வெய்யினும்...பனியினும் - வெயிலென்றும், மழையென்றும், நடுங்குகின்ற பனியென்றும் பாராது வினைமேற்கொண்டு.

பொய்யினும் புரையினும் - மனத்தை அலைவிக்கும் பொய்யுரைகளாலும், வினையைத் தளர்விக்கும் பழியுரைகளாலும்,

பூட்கை தளராது - தாம்கொண்ட உறுதிப்பாடான கொள்கையில் நிலை நெகிழ்வுறாது.

காலையும் மாலையும் கடும்பகல் யாமமும் - காலையிலும், மாலையிலும், இடைப்பட்ட நடுப்பகலிலும், நடு யாமத்திலும்,

வைகலும் நாடி - நாள்தொறும் மக்களை நாடிப்போய்.

மெய்கலந்து - தம் கருத்தை எண்பிக்கும் மெய்ம்மை சான்ற எடுத்துக்காட்டுகளை இடையிடைக் கலந்து.

புனைவின்றி - சொல்லாரவாரங்களாலும், கருத்து ஆரவாரங்களாலும் அழகுபடுத்தாது எளிய உரைகளால்.

கொல்வரியின் சொல்பாய்ச்சி - கொல்லப் பாயும் வரிப்புலியைப் போலும் வீறுசான்ற சொற்களைக், கேட்போர் உணரும்படி செலச்சொல்லி சொல்லாகிய நீரை மனமாகிய விளைநிலத்து விரைந்து பாய்ச்சி.

தொல் குடிமை கட்டழித்த - தொன்மை மிக்க தமிழ்க் குடியினைக் கட்டுக்குலைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/142&oldid=1220778" இலிருந்து மீள்விக்கப்பட்டது