பக்கம்:நூறாசிரியம்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

117

ஆரியத்தை அதுமித்து - தமிழினத்தொடு இடை வந்து கலந்த ஆரிய இனம் தாம் பிழைத்தல் வேண்டிப் புகுத்திய எத்து ஏமாற்றுகளின் அடிப்படையெல்லாம் கூறிக்கருத்தான் முறியுண்டுபோமாறு வலுவிழக்கச் செய்து,

பட்டமும் பதவியும் பரவலும் நாடாது - ஆரவாரம் மிகுந்த பட்டப் பெயர்களையும், அதிகாரத்தையும் செல்வத்தையும் மிகுக்கின்ற அரசப் பதவிகளையும், புகழுரைகளையும் நோக்கமாக நாடாது, தொண்டு ஒன்றே குறிக்கோளாய் நின்று.

பழமை கடிந்து - அறியாமையால் மக்கள் தாங்கொண்ட மூடப் பழக்கங்களைக் கடிந்து விளக்கி;

கைம்பெண்ணை மீண்டும் மறுமணஞ்செய்வித்தல் கூடாதென்பதும், பெண்ணைக் கல்வி புகட்டாது அடிமைப்படுத்தி வைத்தல் வேண்டுமென்பதும், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், குத்து விளக்கேற்றுதல், தீவலம் வருதல் போலும் சடங்குகளன்றித் திருமணஞ் செய்வித்தலாகா தென்பதும், காருவா (அமாவாசை), வெள்ளுவா (பெளர்ணமி) நாள்களிலும், கோள் மறைப்புக் காலங்களிலும் சடங்குகள் செய்தல் வேண்டுமென்பதும் போன்ற பழமை நிரம்பிய மூடப்பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியவர் இவரே என்க.

பாழ்மை புலங்காட்டி - மக்களை முன்னேற்ற விளைவற்றவர்களாக ஆக்குகின்ற இழிநிலைகளை அவர் தம் அறிவுக்குப் புலப்படுமாறு விளக்கிக் காட்டி

மக்களை நான்கு பிரிவுகளாக ஆக்கும் ஆரிய 'வருண' முறைகளையும், அவற்றுள் மேற் பிரிவினர்க்கு அடுத்துள்ள பிரிவினர் தாழ்ந்தவர் என்னும் ஏற்றத் தாழ்வுகளையும் அவர்களுள் ஒரு சாராரைத் தீண்டத்தகாதவர் என்றுரைத்த கொடுமையையும் அன்ன பிறவற்றையும் மக்களை இழிந்தோராக்கும் பாழ்மைகள் என்ற எடுத்துரைத்து, அவற்றிற்குரிய அறிவுநிலைகளைச் சுட்டிக்காட்டி விழிப்புறச் செய்தவர் இவரே என்க.

மருளும் இருளும் மறுமையும் போக்கி - மக்கள், அறியாமை நிலைகளுள் வழிவழியாய்க் கொண்ட ஈடுபாட்டு மயக்கத்தையும், அறிவொளி காணாது அறியாமை இருளுள் தம்மைப் புதைத்துக் கொள்ளும் மனமிருண்ட தன்மைகளையும், மறுபிறப்பு முதலிய பிறவிக் கருத்துகளால் ஏற்பட்ட போலித்தன்மைகளையும் போக்கி;

ஆ. முதலிய விலங்குகளையும், கலுழன் முதலிய பறவைகளையும், மூஞ்சுறு முதலிய சிற்றுயிர்களையும் வழிபடுகின்ற மயக்கத்தையும், ஏவல், வைத்தல், எடுத்தல் ஆகிய பில்லி, இடுமருந்து, மோடி முதலியன செய்தலும், கழிப்பாலும் காற்றாலும் நோய் முதலியன நீங்கும் என்று நினைத்தலும் ஆகிய அறியாமை இருளையும், நோயும், நொடியும், வறுமையும், வாழ்வும்