பக்கம்:நூறாசிரியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

நூறாசிரியம்

முன்பிறவியிற் செய்த தீவினை நல்வினையைப் பொறுத்தன என்றலும், இப்பிறவியில் இல்லாதார் துன்புறினும் மறுபிறவியில் நலமெய்துவர் என்றலும் ஆகிய பிறவி நம்பிக்கைகளை நீக்குமாறு மக்கட்கு அறிவுறுத்தி நீங்கச் செய்யப் பாடுபட்டவரும் இவரே என்க.

திகழ் நலம்ஒன்றே நிறைந்தெனக் கூறி - கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே மக்கள் யாவர்க்கும் அறிவுக்கும் பொந்திகை தருவதெனக் கூறி, பொந்திகை மனநிறைவு.

குலக்கோடறிந்து - குலப்பிரிவுகளின் கொடுமை மிக்க ஏற்றத் தாழ்வுகளைத் தம் கருத்தால் முறிவுறச் செய்து குலமாகிய கிளைப் பிரிவுகளை அரிதல் செய்து;

சமயக்கால் அறத்துணித்து - போலியும் புன்மையும் நிறைந்த செயல்களின் மேற் கட்டப்பட்ட போலிச் சமயப் புனைவுகளை அறவே வெட்டி வீழ்த்தி.

ஒவ்வொரு சமயமும் பிறிதொவ்வொன்றுக்கும் மாறுபட்ட அமைப்புகளையே உடைமையின், அவை ஒவ்வொன்றும் மக்களை ஒரு மித்த வழியிலல்லாது வேறுபட்ட வழிகளிலேயே கொண்டு சேர்த்துப், புன்மையும் பூசலும் நிரப்பி வருகின்ற நிலைகளைத் தம் ஆற்றல் பொருந்திய அறிவுரைகளால் மக்கள் மனங்களினின்று வெட்டி வீழ்த்திய குமுகாயச் சீர்திருத்தக்காரர் இவர்-என்க.

கலக்குறு கொள்கைக் கடவுள் மறுத்தே - மனக் கலக்கத்தினின் றெழுந்த கொள்கையால் தோன்றிய கடவுள் தன்மைகளை மறுத்து மனத்தூய்மையால் எய்தப் பெறுவது இறைக் கொள்கை. அவ்வாறின்றி மனத்துய்மை பெறாது தீய நினைவுகளாலும் தந்நலப் பற்றுகளாலும் கலக்கமுற்றுக் கற்பனை நிறைந்த நிலையில் தோன்றியது கடவுட் கொள்கையாகலின் அதை மறுத்தார் என்றபடி என்னை? 'உள்ளங்கடந்த பொருள்' என்பது கடவுளெனின், உள்ளங் கடந்த பொருள் உள்ளத்துக்குப் புலப்படுவதெங்கன்? இனி உள்ளம் கடந்ததெனின் உள்ளம் என்பது வேறா? உள்ளமும் கடவுளும் ஒரே பொருளெனின் உள்ளத்தைக் கடந்து நிற்பது கூடுமோ? பொருள் என்பது மாத்திரை (அளவு)களான் அறியப் பெறுவதொன்றாகலான் கடவுளை அறியப் பெறுவதில் வேறுபாடுகள் தோன்றுவது ஏன்? ஓருள்ளத்தே கடவாமல் நின்றும் பிறிதோருள்ளத்தே கடந்து நின்றும் இருத்தல் கூடுமோ? அவ்வாறன்று உள்ளம் என்பது அறிவு; ஆகையான் அறிவான் அறிந்துரைக்கப் பெறாத ஒன்று என்றுரைக்கின்; அறிவுக்குப்புலப்படாததை அறிவறிந்த தெவ்வாறு? அறிவு காணாத ஒன்றை அறியக் கண்டது எது? அஃது ஒருவர்பாலிருந்து ஒருவர்பால் இராத கரணியமென்னை? உளர்பால் உணர்வித்தும் இலர் பால் மறைப்பித்தும் செய்தது எது? அவ்வல்லமை எவர்க்குண்டு? கடவுட்கே உண்டெனின் அவர் தோன்றாதிருக்கச் செய்த கரணியம் என்ன? அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/144&oldid=1220804" இலிருந்து மீள்விக்கப்பட்டது