உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

121

தள்ளப் பெறும் அது, பன்றிக்கு உணவுதானே, நமக்கு உணவு இறைமை என்றால், இறைவன் தந்ததென்றால் பன்றிக்கு மலம் இறைமையென்றும் இறைவன் தந்தது என்றும் கூறப்பெறுவதில் பிழையென்ன?

எனவே, சமயங்களைத் தோற்றுவித்த கற்பனைக் கலைஞர்கள் அனைவர் கருத்துகளும் அவர்கள் அவர்களுக்குள்ளாகவே மறுத்தொதுக்கும் கருத்துகளென்று உணர்க. மறுக்கப்படாத அறிவு எதுவோ, மறுக்கப்படாத உணர்வுநிலை எதுவோ இறை என்க. பிறநிலைகள் எல்லாம் இறைமையின் தன்மாத்திரைக் கூறுபாடுகளே.

இவ்வடிப்படையில் நோக்கின் சமயங்கள் கூறுகின்ற கடவுள் நிலைகள் கலக்குறு கொள்கையின் எழுச்சிகளே ! அவை அனைத்தும் இறைமைக்குட்பட்ட கோட்பாடுகளே எனினும் அவைதாம் இறைமை எனச் சுட்டப்பெறுவதில் தவறில்லை. பிறவெல்லாம் வேறு என்பதில்தாம் பிழைபாடுகள் நேர்ந்திருப்பதை அறிவியல் கண்கொண்டு பார்ப்போர் உணர்வர். அறிவியல் மெய்யறிவியலுக்கு மாறுபட்டதன்று. மெய்யறிவியலுக்கு அறிவியலே வாயில். மனம் திரையாயின் அறிவியல் ஒளியும், மெய்யறிவியல் காட்சியுமாம். பெரியாரால் கடியப்பெறும் கொள்கைகள் சாணியை வணங்கென்பதும், சாம்பலைப் பூசென்பதும் போன்ற சிறுமைக் கொள்கைகளே என்க. இறைமையின் பிறநிலைகள் பிறவிடத்து விளக்கப்பெறும்.

யாரும் யாவும் யாண்டும் துய்ம் என - உலக மக்கள் யாவரும் உலகில் நலந்தரும் யாவற்றையும், எக்காலும் துய்த்தல் செய்வீர் என.

பொதுமை அறம் பிலிற்றும் இக்கொள்கை உலக மக்கட்கெல்லாம் உடன்பாடான கொள்கை. ஒரு சாரார் மறுத்தொதுக்கும் எதுவும் பொதுமைக் கொள்கையாகாது என்க.

புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும் - இத்தகைய மக்கட்குப் புதுமையான எண்ண வுணர்வுகளை அவர்கள் மனத்தே சொற்களால் பொழியச் செய்து, பொதுமை யறத்தைத் தழையச் செய்யும் அரியார் ஆகலின் அவர் ஒருவரே பெரியார் எனத்தக்கவர் என்க.

பெயரியோரே - எளிய மாந்தர்களினின்று வேறுபட்டெழுந்த பெரியார் என்னும் பெயருக்கு உரியவரே! என்னை? செயற்கரிய செய்வார் ஆகையால், பெரியார் என்னும் பெயர் அவர் முதுமையான் வந்ததன்று. முதுமை எய்தியோர் பலர் உளர் எனினும், பிறர்க்கு அருமையானவற்றை இவர் செய்கின்ற தன்மையாலேயே இவரைப் பெரியார் என்பது. இது பாடாண் திணையும் வாழ்த்தியலென் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/147&oldid=1220815" இலிருந்து மீள்விக்கப்பட்டது