பக்கம்:நூறாசிரியம்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நூறாசிரியம்
25 மெளவல் நாற்றம்


கைம்பாற் கள்ளி யிவரினு மொய்ம்பிலை
மைங்கால் நொச்சி மணப்பினும் அரத்துவாய்
வெவ்விலை வேம்பின் சினையணைந் தவிழினும்
மெளவல் நாற்றம் வெவ்வே றாதே!
எவ்விடம் பெயர்வோ ராயினு மவ்விடஞ் 5
செவ்வி மாறுவ ரல்லர்
ஒவ்வி யுளம்புகுந் தெனைமணந் தோரே!


'பொழிப்பு:

கைப்புடைய பால் ஊறுங் கள்ளிச் செடியின் மிசை ஏறிப்படர்ந்தாலும், அடர்ந்து நெருங்கிய இலைகளையும் கருமை பொருந்திய கால்களையும் உடைய நொச்சிச் செடியினைப் பற்றித் தழுவினாலும், அரத்தின் வாயைப் போன்றதும், வெப்பம் பொருந்தியதுமான இலைகளையுடைய வேப்பமரத்தின் மலர்முகைகளை அளாவி மலர்ந்தாலும், முல்லையின் நறுமணம் அவ்வவ் விடத்திற்குத் தக்கவாறு மாறுபட்டுக் கமழாது, வினையினிமித்தம் எத்தன்மை வாய்ந்த இடங்கட்குப் பெயர்ந்து செல்வோராயினும், அவ்விடங்களால், தமக்கியல்பான பண்பினின்று மாறுபடுவோரல்லர், புறத்தே விரும்பி உடன்பட்டு உள்ளத்துட்புகுந்து நின்று என்னை மணந்து கொண்ட அவரே!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவனின் அறிவும், பண்பும் அறிந்து, அவன் வினைப்பாடு கரணியமாகப் புறத்தே பலவிடங்களுக்கும் பெயருந் தன்மையோன் எனினும், அவ்விடங்களின் சூழ்புகளாற் கவரப்பட்டுத் தன் ஒழுக்கத்தில் மாறுபடுவோன் அல்லன் என்று அவன் பண்பாட்டைப் போற்றித் தோழியிடம் தலைவி உரைப்பதாக அமைந்ததிப் பாட்டு.

கற்புக் காலத்து மேற்கொண்ட இல்லற வொழுக்கத்திடையில் பொருள் வருவாய் கருதி, வினைமேற்கொண்டு பிரிந்த தலைவன், வரவு நீட்டித்துக் காலங்கடத்தியது கண்ட தோழி, ஒரு கால் சென்றவிடத்துப் பலதேயத்து மகளிரையும் காண வாய்ப்புழி ஒழுக்கங்குன்றுவனோ, குன்றி அவர்வயப்பட்டு நிற்க, வரவு நீடியதோ என ஐயுற்றாளாக, அவள் ஐயுறவு