பக்கம்:நூறாசிரியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

125


26 முற்றச் சிலம்பி'


முற்றச் சிலம்பியின் நுண்ணிழை பெய்த
அற்றங் காவா ஆடை போர்த்து
மறுகிடை அசையும் மடக்கொடி யோயே!
நாண்மிக வுடைத்தே நிற்பெண் டகையே!
என்கொல் அறிகிலம் நின்னுளக் கிடக்கை! 5
இளம்பொன் மேனி எழிற்காட்டு வையினே
மைம்புகை யாடி ஒளிமழுக் கல்போல்
மெய்யுமிழ் வனப்பை நின்னுடை மறைக்கும்!
ஆகலின் அக்கலை அகறலும் நன்றே!
ஈங்கிது பெண்மைக் கிழுக்கென் பையினே, 10
யாங்குநிற் குணர்த்துவ னம்மே? தூங்கெழில்
ஏதென நூலோர் இயம்பின ரென்னின்
பூங்குழன் மாதர்க்குப் பொருந்துநல் நானும்,
விரையொளி நுதலோர்க்குப் புரையிலா நெஞ்சும்,
துவர்வாய்க் கனியோர்க்குத் தவறிலா நடையும், 15
அச்சக் கதவமும் எச்சமில் உரையும்,
என்றிவை தாமே யன்றிப் பிறவே
வென்றி ஆடவர் உளம்வீழ்த் தாவே!


பொழிப்பு:

மனை முற்றத்துக் கட்டிய சிலம்பியினது நுண்ணிய வலையின் இழையினைக் கொண்டு நெய்தது போலும், மறைவிடங்களைக் காவாமல் வெளிப்படுத்திய மெல்லாடையை உடுத்து, மாந்தர் புழங்கும் தெருக்களிடையே அசைகின்ற நடையினளாய்ச் செல்கின்ற இளங்கொடி போன்றவளே! மிக்க நானுறுமாறு உடையது நின் பெண்மைத் தன்மை. நின் உள்ளத்து ஊறிக் கிடக்கும் எண்ணம் எதுவோ என அறிகிலம். இளமைக் கொழுமையும் பொன் போலும் அழகுச் செழுமையும் வாய்ந்த நின் மேனியினது முழு அழகையும் எல்லார்க்கும் கரவின்றிக் காட்டுதற்கு விரும்புவையாயின், கருமையான புகையேறிய ஆடி உள்ளிருக்கும் சுடரொளியை மழுக்கிக் காட்டுவது போல், நின் உடல் வெளிப்படுத்தும் கட்டழகை நீ போர்த்துள்ள இம் மெல்லிய உடையுங்கூட மறைத்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/151&oldid=1220826" இலிருந்து மீள்விக்கப்பட்டது