பக்கம்:நூறாசிரியம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

132

நீடிய நிழல் - நீண்டு கொண்டே போகும் நிழலாகிய இருள். ஒரு பொருளோடு இணைந்து நிற்பதாகிய இருள் நிழல், நில் + அல்-நிலல்-நிழல். நிற்றலாகிய இருள். அல்-இருள்.

பலகதிர் ஒடிய பகல் - பல கதிர்க்கற்றைகள் செறிந்து ஓடிக் கொண்டிருக்கும் பகல்-வெயில் திசை மாறாது நேராக ஒடுவதால் கதிர் எனப்பெற்றது. கதிநேர்திசை-செல்திசை, கதிர் நேர் நோக்கிச் செல்வது. நெல், கம்பு. தினை முதலியவற்றின் மணிப்பூட்டைகளும் தாளினின்று குத்திட்ட நேராக எழுவதால் கதிர் எனப் பெயர் பெறுவதாயிற்று. பகல்(பகு+ அல்) இருளைப் பகிர்வது. - பிரிப்பது - வேறுபடுத்துவது:

உள்வோர் உண்மை - (செல்வம்) உள்ளவர்கள் உளதாம் தன்மை,

இலவோர் இன்மை - அஃதில்லாதவர்களின் இலதாம் தன்மை.

அளவு வரைத்து அன்று -அளவான் வரையறுக்கப்பட்டன அல்ல. உண்மையும் இன்மையும் - வரைத்தன்று. என்றது. பன்மை ஒருமை மயக்கம்

நிழலும் பகலும் போல் உண்மையும் இன்மையும் என்னுமிடத்து நிரல் நிறை மாறியுரைத்தது அவற்றின் மாறுபடும் தன்மையைப் புலப்படுத்துதல் வேண்டி என்க.

நின்று நீளுதல் நிலைபெற்று நீட்சியுறுதல்

நீணிலம் - நீண்ட நிலம், பரந்த உலகம்.

குன்றன்ன... வாழினும்- குன்றின் உயர்ச்சி போன்ற கொடியும், அதன் திரட்சி போன்ற செல்வமும் பெற்று வாழினும்

கொடி நிறுத்தி என்றது குன்றுபோலும் செல்வத்தைத் துய்ப்பதற் குரிய உரிமை பெறுவதைக் காட்டியது. கொடி உரிமை இலச்சினை.

ஒன்றிலார்க்கு - ஒன்றும் வாய்க்கப் பெறாதவர்க்கு.

ஒன்று உவந்து உதவல் - அவர்க்குத் தேவைப்படும் ஒன்றினை உள்ள நிறைவோடு கொடுத்து உதவுதல்.

பின்றைத் தாம்பெறும் பெற்றி - தம் செல்வம் குறைவுபடும் பிற்காலத்துத் தாம் துய்ப்பதற்குரிய வாய்ப்பைப் பெறும் தன்மை,

தாம் ஒன்றை ஈந்தாலன்றித் தமக்குப் பிறர் கொடுப்பதிலர் ஆகலின், தாம் பின்னர்ப் பெறும் பெற்றி முன்னர்த் தாம் ஒன்றை ஒருவர்க்குக் கொடுப்பதே என்க.

இது, பொதுவியலென் திணையும், பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.