பக்கம்:நூறாசிரியம்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

143


30 நாண்மிக வுடைத்தே


ஆயுங் காலை நாண்மிக வுடைத்தே
ஈனாக் கன்றைக் காட்டுநர் கொள்ளும்
ஆமடிச் சிறுபயன் போல
நாமவற் கிளமை நலமழிப் பதுவே!

பொழிப்பு :

ஆய்ந்து பார்க்குமிடத்து மிகுந்த நாணமாக விருக்கின்றது; தான் ஈனாத ஒரு செய்கன்றைக் காட்டி ஆவின் மடியினின்று கொள்ளுகின்ற சிறிய அளவினதாகிய பாலைப் போல, நம்மை மணந்து கொள்ளாத அவனுக்கு நம் இளமை நலத்தைத் தந்து நம்மை அழித்துக் கொள்வது.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

மணந்து கொள்வதாகக் கூறி தன் தலைவியிடத்துக் களவுப் புணர்ச்சி மேற்கொண்டொழுகும் தலைவன் காதுகளிற் படுமாறு தோழி தலைவிக்குக் கூறியதாகும் இப்பாட்டு.

‘தலைவன் தான் மணந்து கொள்கின்றேன்’ என்று கூறிய கூற்று உண்மையானதன்று. புனைவு சான்றது. அன்றாயின் அதனை அவன் மெய்ப்பிக்க முயலுவான். அவ்வாறின்றி இரவுக் குறியிடத்து அவன் நாளும் வந்து களவின் புணர்ந்து செல்வதும், நாம் அவன் சொல்லை நம்பி அவன் பொருட்டு நம் இளமையை அழித்துக் கொள்வதும் நமக்கு மிகுந்த நாணத்தை விளைவிப்பதாகும். எனவே நீ எச்சரிக்கையாகவிரு என்று தலைவிக்குத் தோழி அறிவுறுத்தினாள் என்க. இதனைத் தலைவனின் காது படும்படி அவள் கூறியது, அவன் அது பற்றி எண்ணி மணந்து கொள்ளும் காலத்தை நீட்டிக்க விடான் என்று கருதி என்க.

ஆயுங்காலை என்றதால் நாம் இதுவரை ஆராயாமல் நடந்து கொண்டோம். இனி அவ்வாறு இருத்தலாகாது என்றாள் என்க. நாம் மட்டுமன்றி அவனும் இது பற்றி ஆராய்ந்து பாராது நடந்து வருகின்றான். இனி அவனும் ஆய்ந்து பார்த்து மணத்திற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும் என்றும் குறிப்புணர்த்துவாள்.

நாண்மிகவுடைத்து என்றுழி, நாம் இவ்வாறு செய்யும் செயல் மிகுந்த நாணத்தைத் தரத்தக்கது. பிறர்க்கு இது தெரியவரின் மிகவும் இழிவாகும்