144
நூறாசிரியம்
என்றாள். யாங்கள் மட்டுமேயன்றி நீயும் எம்மை ஏமாற்றி எம் இளமையை அழிப்பது நாணற்குரியதே என்றும் அஃது ஒர் ஆண்மகன் செய்தக்கது அல்லதென்றும் குறிப்புணர்த்தினாள் என்க.
ஈனாக்கன்று - ஈனப்பெறாத கன்று. செய்கன்று. ஈன்றகன்று இறந்த விடத்து, வைக்கோல் முதலிய செய்பொருள்களைக் கொண்டு கன்று போல் செய்வித்து அதனைக் காட்டி ஆமடி கறப்பர். மெய்க் கன்றையன்றிப் பொய்க்கன்றைக் காட்டிக் கறத்தல் ஆவை ஏமாற்றிக் கறத்தல் ஆகும்.
காட்டுநர் கொள்ளும் ஆடிச் சிறுபயன் - ஈனாக்கன்றைக் காட்டிக் கறப்பவர் கொள்ளுகின்ற ஆமடியின் சிறிய அளவினதாகிய பால்.
மெய்க்கன்றை யூட்டிக் கறக்கும் பாலினது அளவினும் பொய்க் கன்றைக் காட்டிக்கறக்கும் பாலினது அளவு குறைவுபடும் ஆகையால் அதனைச் சிறுபயன் என்றாள். இனிச் சிறுமை பொருந்திய பயனுமாம் என்க.
தலைவன் ‘வரைந்து கொள்வேன்’ என்றுகூறும் கூற்றினைத் தோழி ஈனாக்கன்றுக்கு உவமித்தாள் என்க. நம் ‘நம்பிக்கை'யாகிய மெய்க்கன்று இறந்தவிடத்துப் பொய்க்கன்று ஆகிய ‘வரைந்து கொள்வேன்’ எனும் பொருளில்லாச் சொற்களைக் கூறி நம்மை மேலும் மேலும் ஏமாற்றி வருகின்றான் தலைவன்; எனவே விழிப்பாயிரு’ எனத் தலைவிக்குத்தோழி எச்சரிக்கை செய்தாள். அவ்வாறே இனி நீயும் எங்களைப் பொய் கூறி ஏமாற்றி வருவதை நாங்களும் உணர்ந்து கொண்டோம். இனி மணமுடித்துக் கொண்டாலல்லது களவுப் புணர்ச்சியை நினையாதே’ என்று தலைவனுக்கு விடுத்த எச்சரிக்கையாகவும் கொள்க.
இனி, காட்டுநர் கொள்ளும் என்றதால், யாமே தராது நீயே வலிந்து கொண்டனை என்றும் தலைவற்குக் குறிப்புணர்த்தினாள் என்க.
ஆமடி என்று உறுப்பைப் புலப்படுத்திக் கூறியதால் உள்ளத்துணர்வின் வழிப்பெறாத உறுப்புப் புணர்ச்சிக்கு நீவிர் இருவீரும் அடிமையாகல் வேண்டா என இருவர்க்கும் அறிவு கொளுத்தினாள் என்க.
களவுக் காலத்துப் பிறர் வருகைக்கு அஞ்சியஞ்சி விரைந்து கொள்ளும் புணர்ச்சியின்பம், உள வேட்கையைத் தீர அவிக்காது உடல் வேட்கையை மட்டும் சிறிதே அவிக்கும் தன்மைத்து ஆதலின் சிறுபயன் என்றாள்.
இனி, மணந்து கொள்ளப் பெறாது மெய்யின்பம் பெறும் அவர் செய்கை சிறுமைத்தாகலின் சிறுபயன் என்றாள்.
புறத்தை மறந்து துய்க்க வாய்ப்பின்றி, உரிமையற்ற கொல்லையுட் புகுந்து பறித்தல் போல், அகத்தைப் புறத்து வைத்து வெருவச் சுவைத்தலின் இன்பம் என்னாது பயன் என்றாள் என்க.