பக்கம்:நூறாசிரியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

நூறாசிரியம்

உறுத்ததும் என ஓரிரு நொடிப் பொழுதிலேயே நடைபெறுதல் போல், அவனின் இயக்கமும் உயிர்ப்பும் வாழ்வும் முடிவும் என்ன ஒரு சிறு இடைப் பொழுதிலேயே நடைபெறுகின்ற தன்மையுடைத்து.

இனி, ஒரு குறி நோக்கி வீசப்பெற்ற அக் கவண்கல், ஓரிரு நொடியிலோய தன் இலக்கைத் தொட்டு இயக்கத்தை முடிப்பதாய் இருக்க, அஃது அவ்விடைப் பொழுதிற்குள். தன்னறிவு பெறுதலும், தன்னை எற்றியவனை எண்ணுதலும், அவன்றன் அறிவையுணர்தலும் யாங்கன்? அதுபோல் இவ்வுலகின் கண் ஒரு குறிநோக்கி வீசப்பெற்ற மாந்தன், தனக்கு இயக்கமாகிய ஓரிடைப் பொழுதிற்குள் தன்னறிவுற்று, அதன் வழித் தன்னுணர்வு பெற்று, அதன்வழித் தன்னை இறுத்தானை மெய்யறிதலும் யாங்கன் இயலும் என்க. அறிவு என்பது ஒன்றின் புறமும் உணர்வு என்பது அகமும் ஆம். இவ்வுவமையால், மாந்த உயிரின் தோற்றமும், வாழ்வும், முடிபும் நன்கு தெளிய வைக்கப் பெற்றன.

என்னை? கவண் என்றதால் இவ்வுயிர் இறைப் பொருளின் ஓராட்சி நிலையில் அடக்கப்பெற்றுக் கிடந்ததும், முகம் என்றதால் அவ்வகப்பாடும் இறைப் பேராற்றலின் அகத்தே உள்ளொடுங்காது, உருண்டையின் மேற்புறமும் ஒளியின் புறச்சுடரும் போல் புறப்புறமாய் ஒடுங்கி நின்ற நிலையும், உருவிய என்றதால், அஃதோர் இலக்கு நோக்கித் தனியாட்சி நிலைக்கு எறியப்பெற்றநிலையும், அஃது அப்பேராற்றலினன்று உருவி வெளிப்பட்ட நிலையும், சிறு என்றதால் அவ்வுயிரின் சிற்றறிவும், சிறு வினையும், சிறுவியக்கமும் உள்ளடங்கிய சிறுமையும், கல் என்றதால் தன்னளவில் அவ்வுயிரேற்ற பூதவுடம்பின் இருப்பும் பருப்பும், உலகளவில் அதன் அளவும் தன்மையும், போல் என்றதால் உலகப் பொருள்கள் யாவும் ஒன்றுபோல் ஒன்று என்ற ஒப்புமைக் குறிப்பும், விசைப்பு என்றதால், கொண்டு செலுத்தும் விசையேற்றமும் செலுத்தக் கொள்ளும் விசையிறக்கமும், அளவு என்றதால் எல்லாவற்றுக்கும் அளவுண்டாம் என்னும் பேருண்மையும், இடை என்றதால் முதலும் முடிவும் அறியப்பெறாமல் வாழ்க்கை ஒன்றே அறியப் பெற வாய்த்ததொரு நிலையும், பொழுது என்றதால் இருநிலைக்கும் இடை யூடாய் அமைந்த காலம் என்பதும் நுண்ணிதின் உணர்த்தப் பெற்றன என்க.

இனி, சிறுகல் என்றதால் சிறுவிசை, (சிறுஅளவு) சிற்றளவு, சிறுபொழுது என்றும் வருமாறு உணர்க.

இனி, கவ்வுவதால் கவண் என்றும், முக (முன்) நிற்பதால் முகம் என்றும், உள்ளிருந்து புறப்படலால் (உள்-உர்-உரு), உருவு என்றும் கனப்பதால் கல் என்றும், விசும்பு(இயங்கு)வதால் விசை என்றும், ஒன்றின் முழுமையை அளாவுவதால் அளவு என்றும், புலர்தலால் பொழுது என்றும் சொற்பொருள் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/178&oldid=1220660" இலிருந்து மீள்விக்கப்பட்டது