பக்கம்:நூறாசிரியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

முன் புதையுண்ட முத்தமிழ்ச் சிறப்பினை மன்பதைக்கு உணர்த்து தலையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு ஒவாது உஞற்றிய பாவலரேறு அவர்களின் செறிவுறு பாக்களையும் விரிவுறு விளக்கங்களையுந் தாங்கி வீறார்ந்து விளங்குவது நூறாசிரியம் என்னும் இந்நூல்:

தமிழின் விழுமிய இலக்கிய ஆக்கங்களான கழக நூல்களில் ஆய்வும் தோய்வும் உடைய அறிஞர் பெருமக்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்நூலைப் படித்த அளவில் விம்மிதமெய்திச் செம்மாப்புறுதல் உறுதி.

பாவலரேறு அவர்களின் அரிய படைப்புகளான இந்நூல் அகவல் களெல்லாம், இடைக்காலத்தே இறுக்கந் தளர்ந்து போன் யாப்பமைதிக்கும், பொக்காய்ப் போன சொல்லாட்சிக்கும், பொய்க்கோலம் பூண்ட புனைந்துரைகளுக்கும் மாறாக உணர்வழுத்தத்திற்கேற்ற செவ்விய யாப்பமைதியும், செஞ்சொற் செறிவும், நயத்தக்க நல்லணியும் கொண்டு, கற்பாரை ஈர்க்குந் திறத்தில் இணையற்று விளங்குகின்றன.

கழக இலக்கியங்களின் சிறப்பு, மூலநூல் ஆசிரியர்களான பாவலர்களின் திறத்திற்கு எவ்வாற்றானும் குறையாத நிலையிலும், ஒரோவழி அவர்களையும் விஞ்சும் வகையிலும் அஃகியகன்ற நுண்ணிய உரைகளை எழுதிய உரையாசிரியர் பெருமக்களாலும் உயர்ந்துநிற்கின்றது.

அவ்வகையில் இந்நூறாசிரியம் பாவலரேறு அவர்களாலேயே பொழிப்பும் விரிப்புமான நிலையில் தெளிவான விளக்கம் எழுதப்பெற்ற இரட்டைச் சிறப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுரையைப் பயில்வோர் இப்பாடல்கள் ஒரேயொரு சொல்லையே அசையையோ கூடவறிதே தாங்கி நிற்பனவல்ல என்பதை உணரலாம். ஒவ்வொரு சொல்லும் எத்துணை ஆழமான, பொருளுணர்ச்சியோடு திறம்படக் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதை

“மடிப்பிள்ளை குழவியும் இடைப்பிள்ளை பிள்ளையும்
நடைப்பிள்ளை சேயுமாம்”

என்பது போலும் விளக்கங்களால் அறியலாம். அவ்வாறே சில சொற்களின் தோற்றம் பற்றியும் வளர்ச்சியும் திரிபுநிலைகளும் பற்றியும் விரிவான விளக்கங்கள் இவ்வுரையில் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.

புதுச்சொற்புனைவுகளும் புத்தம்புது உவமைகளும் இந்நூலில் ஆங்காங்குப் பொன்னும் மணியும்போல் மின்னி மிளிர்கின்றன

பழந்தமிழ் இலக்கியங்களில் சிறந்து நிற்கும் உள்ளுறையும் இறைச்சியும் என்னும் புனைவுகள் இந்நூற் பாடல்களில் எத்துணை இயைபுற யாக்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/18&oldid=1234682" இலிருந்து மீள்விக்கப்பட்டது