பக்கம்:நூறாசிரியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 154

விசைப்புப் போன்ற மாந்த வாழ்க்கை படிப்படியாய் ஒவ்வொரு நிலைகளையும் கரணியங்களாக உள்ளடக்கிக் கொண்டு கிடக்கின்ற தென்க

செவ்விதின் - அறிவினான - இனி, அவ் வைம்பொறிகளும் தம்முள் ஒத்தபடி முனைப்புற்று நிற்பினும் அவை உள்வாங்கும் அறிவோ ஓர் எல்லையுட்பட்டது.

செவ்விதின் அமையா ஐம்பொறி என்றதால் உலக உயிர்கள் யாவினுக்கும் ஐம்பொறிகளுக்கும் ஒத்தபடி முழுமை பெற்று நிற்பதில்லை என்க. ஒவ்வோர் உயிர்க்கும் ஒன்றோ பலவோ குறைவுற்றே இருக்கும். ஆனால் அவ்வாறின்றி எல்லாப் பொறிகளும் தம்முள் ஒத்தும் மேம்பட்டும் விளங்கினும், அவற்றின் முனைப்பிற்கும் ஓர் அளவுண்டு என்க. காட்டாகக் கட்பொறி அமைப்பை நோக்குவோம்.

ஒருவருக்குக் கட்பொறி அமைதல் ஒரு நிலை, அஃது அழகான வடிவாய் இருப்பது ஒரு நிலை. பின் அது துல்லியமாயிருத்தல் ஒரு நிலை. அடுத்து அது பித்தநீரானும், பீளைமலங்களாலும், சூடானும் குளிர்ச்சியானும் தாக்கப் பெறாமல் தூய்மையுற்றிருத்தல் ஒரு நிலை. அதன் பின், அது கூச்சம், அரிப்பு, மழுக்கமின்றியிருத்தல் ஒரு நிலை, அத்துடன் அஃது ஒளிக்குருடு நிறக்குருடு போலும் குறையின்றியிருத்தல் ஒருநிலை இப்படித்தாய் பல நிலைகளிலும் அது குறையற்று நிறைவுற்றிருப்பினும், அதனால் மிகத் தொலைவில் உள்ள விண்மீனையோ, நேராக வன்றி வளைந்து செல்லும் நிலப்பரப்பினையோ, காணுதல் கூடுமோ? கூடாதென்க. இனி, அது காணக்கூடிய எல்லைப் பரப்பு என்பது ஒன்றுண்டே, அதுதான் அதன் எல்லை என்க. அந்நிலை பலர்க்கும் பலவாறாக வேறுபட்டு நிற்கும்.

இவ்வாறு நம் புறப் பொறிகளான ஐம்பொறிகளும் ஒரு சிறு குறைபாடும் அற்றனவாகி யிருந்தாலும் நம்மால் இவ்வுலகில் மிகமிகச் சிறு பயனையே பெறுதல் இயலும்.

பொறிகளின் ஈர்ப்புத் திறனையே அறிவு என்கிறோம். ஈர்ப்புத் திறனே வாங்கும் அறிவு என்று ஈண்டு சொல்லப்பெற்றுள்ளது.

இவைகொடு தெளிவே இறையவன் உண்மை-முற் கூறப்பெற்ற வாழ்வாகிய சிறு இடைப்பொழுதில், உள்ளத் தெழுந்த முற்றாசையான் பற்றப் பெற்ற வினையையுடைய மாந்தர், தமக்கியல்பாகிய நலிவும் மெலிவும் தவிர்க்கப் பெற்றவராயும், செவ்விதின் அமைந்த ஐம்பொறி முனைப்புடையவராயும் இருந்து அறியப்பெறும் தெளிவின் அளவாகத்தான் இறைவனின் உண்மை புலப்படும்.

என்னை? நமக்குற்ற கண் வழியாகப் பார்க்கப் பெறுவதே இவ்வுலகமும் புடவியும். நமக்குற்ற செவிகளின் வழியாகக் கேட்கப் பெறுவதே இங்குற்ற ஒசையும், ஒலியும். இவ்வாறே பிற பொறிகளின் வழியாக அறியப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/180&oldid=1220664" இலிருந்து மீள்விக்கப்பட்டது