உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

157

யாட்சியின் அதிகாரம் நிரம்பிய தலைமைச் செருக்கைத் தன் வெற்றியால் நொறுக்கிய வலிமை இவனுடையது. ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகின்கண் எக்காலத்தும், எவ்விடத்தும் தன் புகழ் நினைவு கொள்ளும்படி தமிழ் மொழிக்கென்று பதினொரு நாள்கள் விழா வெடுத்த துணிவு இவனுடையது மடமை நிரம்பிய மூடக் கொள்கைகளைத் தடுத்து, அவை மீண்டும் கிளையா வண்ணம் ஒடுக்கி அறிவுக்கு உடன்பட்டுப் போமாறு மக்களை நிறுத்திய பெருமை இவனுடையது. வெளிப்படையாகவே பொய்மைகூறி யொழுகிய சிறுமையர் நடுங்கும்படி, அறம் தழுவியவாறு நிறுவப் பெற்ற அரசு இவனுடையது. தன் சார்பினராகிய இளைஞர்கள் கட்டுப்படும்படி சொல்தளர்வு அறியாத உரையாற்றலோடு வினை வலிமையும் சூழ்ந்திருத்தலின் இவன் முயற்சிகள் தோல்வி யின்றி விளங்குமாக இவனின்று தொடங்கிய செந்தமிழ் வெற்றியின் அடி அசைவின்றி நிலைபெறுமாக!

விரிப்பு :

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

“இப் படிமத்து நிற்கும் இவன் யார்?” என்று சதுக்கம் ஒன்றில் நின்றிருந்த அண்ணாத்துரையின் படிமத்தைப் பார்த்துக் கேட்ட வழிப்போக்கற்கு விடையாகக் கூறியதாகும் இப்பாட்டு.

“தமிழ் மரபு தாழ, இருபதியாண்டுகள் வடநாட்டினரின் தில்லியாட்சிக்குக் கையாளாக நின்று, தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பேராயக் கட்சியின் வலிமையைத் தாழ்த்தி, அரசைத் தேர்தல் வழி கைப்பற்றி, மதராசு என்று வழங்கி வந்த இந்நாட்டிற்குத் தமிழ்நாடு என்னும் பெயரைச் சூட்டிய பெருமையும், ஆட்சி வெறியில் மேலேறி நின்ற தில்லியின் அதிகாரச் செருக்கை நொறுக்கிய வலிமையும், தலைநகரில் பதினொரு நாள்கள் உலகத்தமிழ் விழாவெடுத்துத் தமிழ்மொழிக்குப் பெருமை சாற்றிய துணிவும், தன் கருத்து வலிமையால் மூடக் கொள்கைகளை முறியடித்த திறமையும், எவர்க்கும் கட்டுப்படா இளைஞர்களைக் கட்டுப்படுத்திய சொல் வன்மையும் வினைவலிமையும் கொண்ட அண்ணாத்துரையென்னும் விறலோனுடையதாகும் இப்படிமம்” என்று விடையாக மொழிந்தது. இது.

பேராயம் எனும் பெரும் பெயர்க் களிறு - பேராயம் (Congress) என்னும் புகழ்வாய்ந்த கட்சி கட்சிகளுள் அஃது ஒரு களிறு போல்வதாகவின் பெரும் பெயர்க் களிறு என உருவகிக்கப்பெற்றது.

ஆரமர்க்களம் - நிறைந்த போர்க்களம் குடியரசமைப்பில் தேர்தலே போர்க்களம் போன்றதாகலின், அதன் வெற்றி தோல்வியே ஓர் அரசு அமைவதற்கும், சரிவதற்குமான அடிப்படைகளாம். ஆர்தல் நிறைதல். பொருந்துதல் நிறைந்த அமர்க்களம் என்றது. பொதுத் தேர்தலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/183&oldid=1220677" இலிருந்து மீள்விக்கப்பட்டது