பக்கம்:நூறாசிரியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

நூறாசிரியம்

அறைக் கிடத்தல் - புலம்ப வீழ்த்துதல், பேராயக்கட்சி ஒரு களிறு போல்வதாகலின் அதை புலம்பி யழும்படி அடித்து வீழ்த்தி - எனலாயிற்று.

ஊராயத் திருத்தி - ஊர்மக்கள் நடுவில் நிறுத்தி.

உருக்குலைத்திட்டு - அதன் பொய்யுருவைக் குலைத்து மெய்யுருவைக் காட்டி

பேராயக்கட்சி தமிழ்மொழி வளர்ச்சிக் கெதிராக இந்தி நுழைப்பையும், தமிழின வளர்ச்சிக்கெதிராக ஆரியவின மேம்பாட்டுக்கானவற்றையும், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிராக வட நாட்டினர் தம் மேலாண்மைக்கு வழி வகுக்கவும் செய்ததெனினும், அது மக்களிடையில் தன்னை ஒரு நடுநிலைக் கட்சியென்றும், மக்கள் முன்னேற்றத்திற்கே உழைக்கும் தன்மை வாய்ந்ததென்றும் போலிக் கொள்கை கூறி அவர்கள் நம்பும்படி செய்தது. இப் பொய்ப் புனைவைத் தோலுரித்துக் காட்டி, அதன் புரட்டுகளை அம்பலப்படுத்திய அண்ணாத்துரையவர்கள் தலைமையாக நின்று இயக்கிய திராவிட முன்னேற்றக் கழகமே யாகலின், ஊராயத் திருத்தி உருக்குலைத்திட்ட பெருமை அவரையே சாருமென்க.

தமிழக அரசை தலைமுதல் நிறுத்திய.... அண்ணாத்துரையே - பேராயக் கட்சி தமிழ்நாட்டரசை தி.பி. 1978 (கி.பி.1947) இல் மேற்கொண்டது. அதை அண்ணாத்துரை அவர்கள் தி.பி.1998 (கி.பி1967) இல் பொதுத் தேர்தல் வழி கைப்பற்றினார். அவரின் முதல் நடவடிக்கையாகத் தமிழ் நிலத்திற்கு அதுவரை இருந்த மதராசு மாநிலம் என்ற பெயரை மாற்றித் தமிழ்நாடு என்னும் பெயரை அமைத்தார். இப் பெயரே மூவேந்தர் காலத் தமிழாட்சியில் இடப்பெற்றிருந்தது. ஏறத்தாழ எண்ணுாறாண்டுக் காலத்திற்குப் பின் மீண்டும் முதன் முதல் அப்பெயரைத் தமிழகத்திற்கு ஆக்கித் தந்த வரலாற்றுப் பெருமை அண்ணாத்துரையவர்களையே சார்ந்ததாகலின் தமிழக அரசைத் தலை முதல் நிறுத்திய அமிழா நெடும் புகழ் அண்ணாத்துரை எனக் கூறலாயிற்று.

அத்தலை தாழ்த்தி....மொய்ம்பே - உலக மொழிகளுக்கெல்லாம் பழமையானதும், இயற்கையானதும், தாயானதும், தலைமை சான்றதுமான தமிழ் மொழியை, ஆட்சியதிகார மேலாண்மையாலும் வலக்காரத்தாலும் தன் அடியின் கீழ்ப்படுத்தி, வடமொழியாகிய சமற்கிருதத்தை ஊக்குவிப்பதாலும்,மிகப்பிந்திய காலத்தே தோன்றியதும், பன்மொழிக் கலவை மிக்கதும், செயற்கையானதும், ஆட்சிக்கென உருவாக்கிக் கொண்டதும் வட இந்தியாவில் வழங்கிவருவதுமாகிய இந்தியெனும் பயனற்ற ஒரு மொழியைத் தென்னகத்து மக்களிடை வலிந்து புகுத்துவதாலும், நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்ற தில்லியரசின் போக்கை, தன் வலிந்த இந்தி யெதிர்ப்புணர்ச்சியாலும் இருமொழிக் கொள்கையாலும் முறியடித்த மொய்ம்பு அண்ணாத்துரையின் ஆட்சியினது என்க. மொய்ம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/184&oldid=1220680" இலிருந்து மீள்விக்கப்பட்டது