பக்கம்:நூறாசிரியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கஎ

பெற்றிருக்கின்றன என்பதற்கு இதன்கன் உள்ள ஊரே பெடையடை” எனத் தொடங்கும் அகப்பாடலைச் சான்றாகக் கொள்ளலாம்.

உன்மத்தம் (ஊமத்தம்) பூவைக் குறிக்கக் கையாளும் ஊற்றி” பாவலரேற்றின் உவமைத் திறத்திற்கும் புதுச்சொற் புணைவிற்கும் ஏற்றதொரு சான்றாம். ஊற்றியாவது Funnal என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, நூறாசிரியம் என்னும் இதன் பெயருக்கு ஏற்ப நூறு அகவற்பாக்களால் இந்நூல் எழுத்து வடிவில் நிறைவு பெற்றதேனும், அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து உரை எழுதி ஐயா அவர்கள் தொடர்ந்து தென்மொழியில் வெளியிட்டு வந்தார்கள்.

இடையிடையே பாவேந்தர், அண்ணா, பெரியார் முதலானோர் மறைவு குறித்துப் பாவலரேறு எழுதிய கையறுநிலைப் பாக்கள் இந்நூறாசிய வரிசையில் இடம்பெற்றமையானும், இந்தி வல்லாண்மையை எதிர்த்துத் தமிழ்நாடு கொந்தளித் தெழுந்தகாலை அவ்வெழுச்சிக்கு அடிப்படையான உணர்வைத் தென்மொழி வழியாகத் தெள்ளிதிற் பரப்பிவந்த பாவலரேறு ‘தமிழ்நானூறு’ என்னும் நூலைப் புனையத் திட்டமிட்டு எழுதி வெளியிட்டு வந்த பாடல்கள் தொடரவியலாது விடுபட்டமையால் அப்பாடல்கள் பன்னிரண்டும் இதன்கண் சேர்க்கப் பெற்றமையானும் நூறாசிரியம் அதன் அளவீட்டைக் கடந்து நீண்டுகொண்டிருந்தது. நூற்றைத் தாண்டி இருபத்து நான்கு பாடல்கள் வளர்ந்துநின்றன.

அறுபத்தாறாம் பாடலை உரையுடன் தென்மொழியில் வெளியிட்ட போது அதுவே தாம் உரையொழுதி வெளியிடும் இறுதிப் பாடல் என்பதைப் பாவலரேறு எண்ணியிருக்க முடியாது!

நூறாசிரியத்தில் இருபத்து நான்கு பாடல்கள் மிகுந்துநிற்ப, அறுபத்தாறாம் பாடலுக்கு உரையெழுதி வெளியிட்டதோடு பாவலரேறு அவர்கள் நெடுந்துயில் கொண்டுவிட்ட நிலையில், அவர்தம் பாவன்மைக்கும் உரைத்திறத்திற்கும் ஒருருவிலான எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நூறாசிரியத்தை வெளியிட முனைந்து முப்பத்து நான்கு பாடல்களுக்கு ஐயா அவர்களின் போக்கிலேயே உரைகண்டு நூறாசிரியத்தை அதன் பெயருக்கேற்ப நிறைவு செய்து வெளியிடுகின்றோம்.

எஞ்சிநிற்கும் இருபத்து நான்கு பாடல்களும் இந்நூலின் கண் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களைப் படிப்போர் உரையின் இன்றியமையாமையையும் உரைகாண்பதிலுள்ள சிக்கல்களையும் உணரக்கூடும்.

நூறாசிரியம் தொடர்பாக ஐயாஅவர்கள் எழுதிவைத்திருந்த சில குறிப்புகளும் இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/19&oldid=1234683" இலிருந்து மீள்விக்கப்பட்டது