பக்கம்:நூறாசிரியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

நூறாசிரியம்


36 ஒருத்தியிங் குண்டே


தோட்குரி யோயே! தோட்குரி யோயே!
கேட்கருந் தொலைவிற் கிடந்துநீர் வடிய
நாட்குநா எளிளைக்குந் தோட்குரி யோயே!
முன்மழை சிதர்ந்து பின்னிலாக் காயும்
மென்னடை யிரவின் எதிர்நா ளெண்ணி 5
நோன்றரு பிரிவிற் றான்றணிப் புலம்புநள்
ஆன்ற தெருவின் அதிர்சிலை மடுத்தே
ஒய்வறக் குரைக்கும் ஒருதனிக் குக்கல்
பாய்ந்தின் வருகை தடுக்குமென் றஞ்சி
எழலும் விழலு மாகி 10
உழலும் மெய்யோ டொருத்தியீங் குண்டே!


பொழிப்பு:

தோளுக்குரியவனே! தோளுக்குரியவனே! அழைப்பொலி கேட்பதற்கு இயலாத நெடுந்தொலைவில் இல்லத்தே படுக்கையில் துக்கமற்றுக் கிடந்து, (நின் பிரிவுத் துயரால்) கண்களில் நீர் வடியும்படி (வாடி) நாளுக்கு நாள் இளைத்துப் போகின்ற நின் தலைவியின்) தோளுக்கு உரியவனே ! முன்யாமத்துப் பெய்த மழை தூறியடங்கிப் பின் யாமத்தில் நிலாக் காய்ந்து வீசும், மெதுவாக நடையிடுகின்ற இரவுக்கு அடுத்துவரும் நாளைக் கணக்கு வைத்து எண்ணியவாறு, கற்பு நோன்புடன் தாங்குதற்கரிய பிரிவில், தனக்குத் தானே பேசிப் புலம்பு கின்றவள், நெடிதகன்ற தெருவில் அலைந்து வரும் எதிரொலியைக் காதுகளில் வாங்கியவளாய், ஒய்வில்லாமல் குரைக்கின்ற தனித்த ஓர் ஒற்றைக் குள்ள நாய், ஒரு வேளை, முன்னறிவியாமல் வருகின்ற) உன் இனிய வருகையைத் தடுத்து விடுமோ என்று அஞ்சி, எழுந்து வந்து வாயிலைப் பார்ப்பதும், வராமை கண்டு உளச் சோர்வுடன் மீண்டும் படுக்கையில் வீழ்வதுமாகிய, உழல்கின்ற உடம்புடன் ஒருத்தி, இங்கு உள்ளாள்.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது. தலைவனின் ஒதற் பிரிவால் உழன்ற தலைவியின் துயரைத் தோழி தலைவற் குணர்த்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/196&oldid=1221089" இலிருந்து மீள்விக்கப்பட்டது