பக்கம்:நூறாசிரியம்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

171


திருமணத்தின்பின், கற்புக் காலத்து, கல்வியின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவனை நாளும் எதிர்நோக்கிய தலைவியின் துயரத்தை அவன் உணருமாறு, தோழி, ஒரு மடல்வழிப் புலப்படுத்தியதாகும், இப்பாடல் என்க.

“தோளுக்குரியவனே! தோளுக்குரியவனே! கேட்பதற்கு அரிய நெடிய தொலைவில் இருந்து, நாளுக்கு நாள் இளைத்துப் போகின்ற தலைவியின் தோளுக்குரியவனே! முன் யாமத்துப் பொழிந்த மழை நின்று, பின் யாமத்துக் காய்கின்ற நிலாவொளி நிரம்பிய இரவில், அவள் வழக்கம்போல் உன் வரவை எண்ணி எதிர்பார்த்துக் கிடக்கின்றாள். அக்கால் எங்கோ ஓர் ஒற்றை நாய் குரைக்கும் எதிரொலி அவள் செவிகளில் எட்டுகின்றது. அக்கால் ஒருவேளை, நீ வருவதாயிருப்பின் அவ் வரவை அந்த நாய் தடுத்து விடுமோ என்று அஞ்சி, எழுந்து ஓடுவதும், பின் வராதது கண்டு மீண்டும் வந்து படுப்பதுமாகிய வெற்றுடம்புடன் இங்கொருத்தி உள்ளாள் என்பதை நினைவிற்கொள்” என்று தோழி, தன் தலைவியின் நிலையை ஒரு மடல் வழித் தலைவனுக்கு அறிவிக்கின்றாள் என்க.

தோட்குரியோயே! - தோளுக்குரியவனே!- தோளுக்குரியவன் என்றதால் திருமணம் செய்த உரிமை புலப்பட்டது. இருமுறை அடுக்கியதால் நினைவூட்டுதலாகவும் அமைந்து, இரக்கக் குறிப்பும் புலப்பட்டது. ஏற்கனவே ஒருத்திக் குரியவன் என்னும் உரிமை சாற்றியதால், பிறர்க்குரிமை மறுக்கப் பெற்றது என்க.

தலைவியின் அனைத்து உறுப்புகளுக்கும் உரியவனான தலைவனை, தோளுக்கு மட்டும் உரியவனாகச் சிறப்பித்துக் கூறியது என்னெனின், அது தழுவலுக்குரியதாகலின் என்க. மேலும் தலைவனின் பிரிவால் மெலிவுறும் தலைவியின் பிற உறுப்புகள் யாவினும் தோளே மிகவும் மெலிந்து தோன்றி அழகு குன்றிப் போவதாலும் என்க.

கேட்கருந் தொலைவு - பேசுகின்ற ஒலி கேட்பதற்கு அருமையான தொலைவு.

தலைவியின் தனித்துப் புலம்புகின்ற ஒலியை நாங்கள் நாள்தொறும் கேட்கும்படி அருகிலிருக்கின்றோம். நீயோ அதைக் கேட்க வியலாதவாறு சேய்மையிலிருக்கின்றாய் என்று குறிப்புணர்த்தினாள் என்க. இதனால் அவள் துயர் நன்கு உணர்த்தப் பெற்றது.

கிடந்து படுக்கையில் துயிலின்றி வெறுமனே படுத்திருந்து. நீர் வடிய கண்ணிர் வழியும்படி நனைந்திருக்கும் தோள். நாட்கு நாள் இளைக்கும் தோள் - நாளுக்கு நாள் இளைத்து வருகின்ற தலைவியினது தோள். பிரிவுத் துயரால் ஒவ்வொரு நாளும் வருந்திக் கிடக்கின்றமையின், தோளின் அழகும் வலிவும் கெட்டு இளைத்தது என்றாள். நாளுக்கு நாள் என்றதால் முன்னைய நாளினும் அடுத்த நாள் மேலும் இளைத்தது கூறப்பெற்றது.