பக்கம்:நூறாசிரியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

179

இனி, கல்வி கற்கப் புகும் நீ, நகரின் சூழலை எதிர்த்துக் கொண்டு, உன் வழியில் செல்லாமல் நீ, கற்கப் புகும் நகரின் சூழலில் அகப்பட்டு வழி தப்பி விடக்கூடாது என்பதைத் தந்தை எச்சரித்தார் என்க. அங்குள்ள நகரச் சூழல்க எழுந்து வீசுகின்ற அலைகளைப் போலும், ஆழ்ந்த கடலைப் போலும் வலிவுடையனவாக இருப்பினும், நீ தன் ஆற்றல் தவிர்ந்த கப்பல், கடல் நீரின் போக்காகப் போய் வழிதவறி விடுதல் போல் தவறி விடக் கூடாது என்பதாகக் கூறினார் என்க.

ஆற்றுநீர், ஊற்றுநீர் மழைநீர் ஆகிய மூன்று நீர்களும் சேர்வதால் கடல் “முந்நீர்” எனப்பெறும் அச்சொல்லால் கடலை இவ்விடத்துக் குறித்தது, நகரத்தை உருவகப்படுத்துவான் வேண்டி என்க. நகரம் பல போக்குடைய மாந்தர்களைக் கொண்டதாகலின் அதனை முந்நீர் போன்றது என்றார்.

மழை நீர் சான்றோர்க்கும், ஊற்று நீர் உலகியல் உணர்வுடைய நடுநிலை மாந்தர்க்கும், ஆற்று நீர் உலகியல் தீமைகளையெல்லாம் கைக்கொண்டொழுகும் கீழ்நிலை மாந்தர்க்கும், இம்மூவகை மாந்தரும் கலந்து வாழும் நகரம், முந்நீர் என வழங்கும் கடலுக்கும் உருவகிக்கப் பெற்றன என்க.

தீமையும் நன்மையும் சார்ந்த உலகில் வாழ்ந்தாலும், கதிரவன் போலும் அறிவு வெப்பத்தால் பிரித்தெடுக்கப் பெற்று , அவ்வப் பொழுது தம்மைத் துய்மை படுத்திக் கொண்டு, மேனிலை எழுச்சி பெற்று, மழை போலும் தூய அறநெறிகளைப் பரந்துபட்டு வழங்கும் தன்மையராய்ச் சான்றோர் உளராகலின், அவர் மழை நீர் போல்வார் என்றார்.

உலகியல் உணர்வால் அழுந்தி நின்று, தாம் இருக்கும் இருப்பிலேயே தம்மளவில் ஊறிச் சுரந்து, தம்மைச் சார்ந்தார்க்கு மட்டுமே நின்றுதவும் தன்மையோராகியோர் நடுநிலை மாந்தராகவின், அவர் ஊற்று நீர் போல்வார் என்றார்.

இனி , தோற்றத்து எளியராகவும், வாழ்வியல் ஒட்டத்து வழியின் கண்பெற்ற அனைத்துத் தன்மைகளையும் தம்முள் கரைத்துக் கொண்டு திரிபுற்றவராகவும், கரைகட்டித் தேக்கின் நன்மையும், தேக்காவிடத்துக் கரைபுரளும் வெள்ளம்போல் தீமையும் செய்யும் திறத்தினோராகியோர் கீழ்நிலை மாந்தராகலின், அவர் ஆற்று நீர் போல்வார் என்றார்.

இத்திறத்து, இம்மூவகை மாந்தரும் கலந்தியக்கும் நகரம், அம் மூவகை நீரும் கலந்தியங்கும் கடல் போல்வதாகும் என்றார்.

இம்மூவகை மாந்தத் தன்மைகளையும் இராசக தமச இராக்கத குணங்கள் என்பர் ஆரிய நூலார். அந்தண்மை, மாந்தன்மை, கயமை என்பது தமிழ்ச் சான்றோர் வழக்கு என்க.

கலம் கரைந்துய்க்கும் கதிர்சுழல் விளக்கம்-கப்பல்களைக் கூவி அழைத்துக் கரைசேர்த்து உய்விக்கும் ஒளிக்கதிர்கள் சுழல்கின்ற பெரிய விளக்கம். கரைதல் கூவி அழைத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/205&oldid=1208923" இலிருந்து மீள்விக்கப்பட்டது