பக்கம்:நூறாசிரியம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

நூறாசிரியம்

“அவ்வாறு நகர்ப்புறச் சூழலில் மயங்கி, நின் கல்வி நோக்கைக் கைநெகிழவிட்டு வழி தடுமாறி நீ நிற்கின்ற பொழுதில், என்னின் இந்த உரை நினக்கு வழி தப்பிய கப்பல்களைக் கூவியழைத்துக் கரைசேர்க்கும் கலங்கரை விளக்கம் போல் நின்று கை கொடுக்கட்டும்” என்னும் குறிப்புணர்வு தோன்ற, தந்தை இதைக் கூறுவாராயினர் என்க. அத்தகைய கலங்கரை விளக்கின் கதிரொளி தடவிச் செல்கின்ற உயர்ந்த மாடங்களையுடைய சென்னை நகரம் என்பார், கலங்கரைந் துய்க்கும் கதிர் சுழல் விளக்கம், சேண்தடவும் மாடச் சென்னையம் பதி என்றார் என்க.

“உயர்ந்த மாடங்களைத் தடவும் கழல் கதிர்போல் இவ்வுரைகள் உன் உயர்ந்த நோக்கங்களைத் தடவி ஒளிவீசட்டும்” என்றார் என்க.

பதி - குடிகள் அயலிடம் பெயராமல் பதிந்து வாழும் நகரம்.

பதிதல் - பதிந்து வாழ்தல் பதி. இதுவே முன்னிலை திரிந்து வதிதல் என்னும் சொல்லைத் தோற்றுவிக்கும்.

ஒவத்தெரு - ஒவியம் போலுள்ள அழகிய தெரு.

கோவினைக் கோட்டம் - அரசுப் பணி செய்யும் காவல் உள்ள மனை.

நெறிதரு மன்று - அறமுறை வகுக்கும் அறநெறி மன்றம்.

திரிதருதல் - நாற்றிசைகளிலும் ஒரு நோக்கம் பற்றியேர் நோக்கமின்றியோ போய்வந்து கொண்டிருத்தல்.

கான்படு விலங்கின் காட்சி - காட்டில் பிடிக்கப்பட்ட விலங்குக் காட்சிச் சாலை.

அவ்வினத்து - வியப்பும் - அவ்விலங்கினங்கள் இறந்துபட்டயின், அவற்றின் உடல் ஊன்களை அகற்றி, அவற்றின் தோல்களைக் கொண்டு பொய்யாகச் சமைக்கப் பெற்ற உடல்கள், உயிருள்ளவை போலவே தோற்றந் தரும் பழம்பொருட் காட்சிச்சாலை.

அருந்தற் பொருள்கள் - பலவகையான நுகர்ச்சிப் பொருள்கள்.

மருந்தின் மனைகள் - மருத்துவ மனைகள்.

இரண்டு சொற்களும் அடுத்தடுத்துப் பயில்வதால், அருந்துகின்ற பொருள்களால் வரும் நோய்களை அகற்றுவதற்குரிய மருத்துவமனைகள் என்றும் இணைந்து பொருள் பெற்றன.

திருந்தா உள்ளம் - செப்பம் பெறாத உள்ளங்கள், சென்றவிடத்தால் செலவிடாதீதொரீஇ, நன்றின் பால் உய்க்கும் அறிவு குறைந்த உள்ளங்கள்.

திசை திசை வீழ்த்தும் - திரும்புகின்ற திசைகள் தொறும், திருந்தாத உள்ளங்களைக் கவர்ந்திழுத்துத் தன் அடிப்படுத்தும்.