பக்கம்:நூறாசிரியம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

186

தன்னை விரும்பாத தலைவனுடைய காதலுக்கு ஏங்கிய தலைவியொருத்தி, அவன் உடலழகை வியந்து உள்ளத்தைக் கடிந்து கூறியதாகும் இப்பாட்டு.

ஓவிய அமைப்புக்கு மாறுபாடுறாத வகையில் அமைந்த உயர்ந்து பரந்த மார்பும், நீண்டு பருத்த தோளும், சுருண்ட அழகிய தலைமயிரும், அகன்று ஒளிபொருந்திய நெற்றியும், எடுத்து நின்ற கூரிய மூக்கும், அருள் பொழியும் கண்களும், அழகுற வடிந்து வீழ்ந்த செவிகளும், பருத்து ஒளிசார்ந்த இதழ்களும், வரிசையுற அமைந்த பற்களும், வீழ்ந்த நெடிய கைகளும் கொண்டு விளங்கும் அவனுக்குத் தன்னை விரும்பாததும் தன்னுயிரைக் கொல்லுகின்றதுமாகிய நெஞ்சு எப்படி அமைந்ததோ என்று ஏக்கமும் வெறுப்பும் கடுமையும் தோன்றக் கூறினாள் என்க.

வடுவின்று- மாசு மறுவில்லாமல்,

ஆடவன் ஒருவனின் மார்பே காதல் உணர்வு கொண்ட பெண்களை முதலிற் கவர வல்லதாகையின் முதற்கண் மார்பைக் கூறினாள் என்க.

எடுத்த மார்பு -உயர்ந்த மார்பு பரந்து நிற்பதால் பரப்பும் உணர்தலாயிற்று.

மார்பினோன் - மார்பை உடையவன்.

நெடுவின் திமிலிய தோளினன் - நீண்டு திமில்போலும் புடைத்து நின்ற தோள்களை யுடையவன்.

தழுவலுக்குரிய தோள்களாதலின் அவற்றின் எடுப்பை அடுத்துக்கூறினாள் என்க.

திமில் என்னும் பெயரடியாகப் பிறந்த வினைச் சொல் திமிலிய,

குழல் என் சுரிந்த- குழல் போலும் சுருண்ட

குஞ்சி -ஆண்களின் தலை மயிர்

பரந்த ஒளிவார் நெற்றி- அகன்று ஒளி சிந்தும் நெற்றி.

அகன்று ஒளி பொருந்திய நெற்றி அறிவுணர்வுக்கு அடையாளமா கலின் அதனை வியந்தாள் என்றபடி

வளி வளர்தல் - காற்று ஒழுங்குபட இயங்குதல்.

மூச்சுக்காற்று ஒழுங்குபட இயங்குதல் உடல் நலமுள்ளவர்க்கே அமையுமாகவின், அவனின் நலம் பொருந்திய உடலை நயந்தாள் என்க. மூச்சுக்காற்று ஒழுங்குபட இயங்கியதை அறிய ஏதுவாய் நின்றது அவனது எடுத்து நின்று கூரியதாய் விளங்கும் மூக்கு ஆகலின் அதன் வழி அவன் மூச்சியக்கமும், அதன் வழி அவன் உடல் நலமும் கண்டு கொள்ளப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/212&oldid=1208952" இலிருந்து மீள்விக்கப்பட்டது