பக்கம்:நூறாசிரியம்.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

நூறாசிரியம்

அஞ்சுவல் யாமே - முற்காலங்களில் அவ்வாறு விரும்பத்தகாதவர் நட்பு ஏற்பட்டதற்கும் இனி ஏற்படுவதற்கும் யாம் அஞ்சுகின்றோம்.

மஞ்சமை குன்றத்து - சிறு அளவில் நீர்த்துளி நிரம்பிய மென்மேகம், பொருந்துகின்ற குன்றத்தில்,

மலர்வாய் குடைந்து -மலர்களின் இதழ்களை விலக்கி உட்புகுந்து.

துமி துமி ஈண்டிய- துளி துளியாகச் சேர்க்கப் பெற்ற

மூரித்தேறல் -முதிர்ந்து செந்நிறம் பாய்ந்த தேன்; முதிர்தலால் செந்நிறம் பாய்தல் இயல்பாயிற்று.

நெஞ்சுதளை யவிழ்ந்து - நெஞ்சின் அகப்புறக் கட்டுகள் நீங்கி,

தமிழ் பெற - இனிமை பெற.

கெழிஇய - உரிமை யுணர்வுடைய.

தகையோர் - பெருமைமிக்கோர்,

தொடர் போல் - இணைவுப் போல்; நட்புப்போல்,

முற்ற முற்ற -முதிர்ச்சியடைய அடைய.

சுவை மூவாது: சுவை தளராது! மூப்பு தளர்வைக் குறித்தது. ‘நெஞ்கதளை யவிழ்ந்து தமிழ்பெறக் கெழீஇய, தகையோர் தொடர் போல் முற்ற முற்றச் சுவை மூவாதே' என்று கூட்டுக.

நெஞ்சின் கட்டுகள் அவிழாவிடத்து உரிமை உணர்வு செலுத்தவும், செலுத்தியதை உணரவும் இயலா வென்க,

உணர்வின் தூவியல் - மனவுணர்வின் துய்மையான இயற்கையாந் தன்மை, துளவியல் தூய இயல்பு.

உரவோர் - அறிவுணர்வுடையோர் உரன்- அறிவுப் புலன்.

இணைவுற- தொடர்புறும்படி, உரவோர்பால் தொடர்பு நிகழுமாறு.

ஆகலின்- எனவே, (அத்தகையாரைத் தேடி)

நெஞ்சு, நீ பல் யாண்டு நட - முன் பூரியர் நட்பிற் கலந்து கவன்று நின்ற நெஞ்சமே, உரவோரொடு பொருந்துவதன் பொருட்டு, நெடுங்காலமேனும் நெடுந்தொலைவேனும் சலிப்புறாது நடந்து கொண்டிரு என்பதாம்.

இப்பாட்டின் கண் பூரியர்க்குத் தேங்காயும், அவரிடத்துப் பெறும் நட்புக்கு அதனின்று பிழிந்த பாலும் உவமைகளாகக் கூறப்பட்டன.

மட்டையை நீக்கிய பின்னரே பயன் படுத்துவதற்குரிய நிலையில் தேங்காயைப் பெறமுடிவது போல், பூரியர் தம் உலகியல் அழுத்தங்களை நீக்கிய பின்னரே, தொடர்பு கொள்வதற்குரிய தகுதியை அவரிடமிருந்து பெறமுடியும் என்க.

தேங்காயின் குடுமி, அவர் தம் ஆரவாரத்தைக் காட்டுவதாகும்.