உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

192

தேங்காயின் வலிந்த ஓட்டை உடைத்து, மூடிகளைத் துருவிப் பிழிந்து பாலெடுப்பது போல், அவரிடம் நெருங்கி அவர் மனவோட்டை உடைத்து உணர்வூட்டித் துருவி ஆராய்ந்து நட்பைப் பெறுவது கூறப்பெற்றது.

தொடக்கத்து அவர் நட்பினால் கிடைக்கும் நகை நலன்களுக்கும் சுவை நலன்களுக்கும், தேங்காயின் வெண் பருப்பும், சுவை நீரும் உவமைகளாம் என்க. காலக் குறுமையில் தோன்றும் அப்பயன்களும், அவரைப் பெற்ற புதிதில் கிடைப்பன போல்வனவாம் என்க.

தேங்காயை உடைக்கும் ஒலியில் பூரியரின் பொருந்திய சொல்லொலியும் நகையொலியும் வெளிப்பட்டு நிற்பதும் கண்டு மகிழ்க! இனி, தகையோர் தொடர்புக்குத் துளி துளியாகத் திரட்டப் பெறும் தேனை உவமித்துக் கூறியது, அதன் கிடைத்தற்கரிய அருமையும், சுவையும், முதிர்வு நலனும் உணர்த்துவான் வேண்டி யென்க.

தேன் பருகுவதல்லாது, சிறிது சிறிதாகச் சுவைக்கப்பெறுதல் போலும், பெரியோர் நட்பு ஒரேயடியாக நுகரப் பெறுதல்லாது அவ்வக்கால் சுவைக்கப்பெறுதல் காண்க

மெல்லிய வெண்மேகம் அமைந்த மலைச்சாரலின் கண் உள்ள நறிய பூக்களினின்று எடுக்கப்பெறும் தேன் என்றது, அவர் தூய மெய்ப் பொருள் சான்ற உயரிய வாய்மை நெஞ்சத்தையும், அந்நெஞ்சினிடத்து மலர்ந்து அன்பு கமழும் சொற்களையும், அவற்றினின்று பெறும் அறிவுத் தேனையும் குறித்தல் வேண்டி என்க.

அவர் சொற்களின்று அவ்வப்போது சிறிது சிறிதாக வெளிப்படும் அறிவு நலன்களை ஒருங்கு திரட்டி நலம் பெறுதல் துளி துளியாக ஈண்டிய முதிர்வுற்ற தேனினால் சுட்டப் பெற்றது என்க.

உரவோர் நட்பு உரிமைக்கும் கெழுதகைமைக்கும் இடனாயிருப்பதை மலர்வாய் குடைந்து ஈட்டிய மூரித்தேறல் என்பதனான் உணர்க. வாய்குடைதல் என்னும் வினை அவர்டால், செலுத்தும் உரிமை உணர்வைக் குறித்த தென்க.

'தேங்காய்த் தீம்பால் முதிர முதிர முகங்கெடப் புளிக்கும் துதை சொற் பூரியர்' என்றவிடத்து, உவமேயத்தை உவமையால் விளக்கியும், 'மலர் வாய் குடைந்து, துமிதுமி ஈண்டிய மூரித்தேறல் தகையோர் தொடர்போல் முற்ற முற்றச் சுவை மூவாது’ என்ற விடத்து, உவமையை உவமேயத்தால் விளக்கியும்போந்தது, முன்னதின் உவமைக்கும் பின்னதின் உவமேயத்திற்கும் காட்டிய சிறப்பும் உயர்வும் என்க.

நட நீ நெஞ்சு என்றதில் உறுதியும் ‘பல் யாண்டு' என்றதில் அருமையும் சோர்வுறாமையும் கூறப் பெற்றமை காண்க

இது பொதுவியல் என் திணையும் பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/218&oldid=1208994" இலிருந்து மீள்விக்கப்பட்டது