பக்கம்:நூறாசிரியம்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

196

அவ்வுடலைப் பற்றிய எழிற் பொருட்டாயினும், இளமைப் பொருட்டாயினும் தொடர்பு கொண்டிருந்து, அப் புறவெழிலும் இளமைப் பருவமும் அழியுங்கால் அவ்வுடல் தொடர்பையையும் தவிர்த்துக் கொள்ளும் தன்மையவாம் ஆகலின்.

உயிரொடும் உயிரென சிலவே- அவ்வாறின்றி, உலக வாழ்வு உள்ளளவும் மற்றோர் உயிர் தங்கிய உடலொடு பொருந்தியிருந்து, இவ்வுலகத்தில் வாழ்வாங்கு கூடி வாழ்ந்து, தான் தொடர்புற்ற உயிருடல் அழிவுறுங்கால், அவ்வுடலோடு தன் உடல் வாழ்வையும் தவிர்த்துக் கொண்டு, பிரிந்தேகும் அவ்வுயிரொடு தம் உயிரையும் பொருத்திக் கொண்டு ஈருயிரும் ஒருயிராய் ஒன்றி உறைந்து நின்று, என்றென்றும் இன்புற்றியங்கும் மீமிசை மாந்த உயிர்கள் மிகமிகச் சிலவே என்க.

என்றிவை எம்மோர் தேறலின்- என்று இவ்வரிய உண்மைகளைத் தேர்ந்து அப்புகழ்க்குரிய வினைகளையே செயலுக்குரியவாகக் கொண்டு. எமக்குரிய எம் தலைவர் விளங்கி நிற்றலுமின்றி, எம் உயிரொடு தம் உயிரையும் பொருத்திக் கொண்டு ஒருயிராக இயங்குவார் ஆகலின்,

இவ்விடத்துத் தலைவி, தான் கனவின் கன்றிய காதல் கொண்டு, உடல் நலம் துய்த்தத்தலைவர்க்குத்தகுதி சாற்றினாள் என்றபடி, எம்மோர் என்றதால், எமக்கே உரியர் என்று உரிமையும், பிறள் ஒருத்தியை நாடா ஒழுக்கமும் சிறந்தார் என்று தலைவனைக் குறித்துப் பெருமையுற்றாள் என்க.

மேலும் தாங்கள் இருவரும் வேறு வேறு உயிர்கள் அல்ல ; ஒருயிரே என்றும் தோழிக்குணர்த்தினாள். எம் நட்பு வெறும் உடலொடு தொடர்புடையதன்று உயிரொடு தொடர்புடையது என்றும் தெருட்டினாள் என்க.

உலகத் தொடர்புக்காக மட்டும் எங்கள் உடல்கள் பொருந்தி இன்பம் நுகரவில்லை. உயிர்த் தொடர்புக்காகவே எம் இருவரின் உடல்களும் பொருந்தின என்றாள்.

இனி, இப் பிறவியே எங்கள் ஓருயிர் ஈருடலாகப் பிறவியெடுக்கும் இறுதிப் பிறவி மற்று, அடுத்து வரும் பிறவிகளுள் ஓருடல் ஓருயிராகவே பிறந்து இயங்குவோம் என்றும் குறிப்புணர்த்தினாள் என்க.

இங்ஙன் ஓரினப்பட்ட உயிர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி உறைந்து உயிர்த்திரட்சி பெற்று இறைமை எய்துவதே மேம்பட்ட மெய்யறிவுக் கொள்கை என ஈண்டு உணர்த்தப் பெற்றது என்க.

குழல் மோந்தோர் - எம் கூந்தலை மோந்தவர். குழல் மோந்தோர் என்றது தம்மை உடலாற் பொருந்தியவர் என்று இடக்கரடக்காகக் குறித்திட வேண்டி என்க.