பக்கம்:நூறாசிரியம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

202

முகமும் நாணத்தால் கவிழ்ந்தே யிருந்தன. திருமணம் ஆகி, உரிமையுடன் என்னைப் பொருந்தி வாழும் இன்றும் அவன் அழகைப் பருக வியலாமல் அதே நாணம் தடுக்கின்றது.

மெய்யெனக் கொள்ளுக. - மெய்யென்று நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்க. ஐய உம்மையால் பொய்யென்று கருதினாலும் கருதிக் கொள் என்பது வருவித்துரைக்கப் பெற்றது. மெய் என்று முதற்கண் கூறியதால் இது மெய்யேயாம் என்று உறுதியும் உரைக்கப்பெற்றது.

மெய்-மெய் (உடல்) போலும் உண்மை. உயிர் உளதாதலை மெய்யென்று உறுதிப் படுத்துதலான் அஃது உடலுக்கும், நுண் பொருளுணர்வாகியதைப் பருப்பொருளான் உணர்த்துதலான் அஃது உண்மைக்கும் சொல்லாகியது.

பேதை- அறிவுப் பேதைமை. பருவங்குறித்ததன்று. தன் கணவனை ஏறிட்டுப் பார்க்கின்ற அறிவுத் துணிவும் கொள்ளாளாகையால் பேதை எனப் பெற்றது.

வெய்தீர் முயக்கு- உடலின் காம வெப்பம் தீரும்படி தழுவுகின்ற தழுவல் தீர்தல். தணிதல்.

இகழினும் இகழ்க- உடல் வேட்கையின் வெக்கை தணிக்கின்ற மெய்யுறு புணர்ச்சியில் அறிவு மயங்கிய பேதை என்று இகழினும் இகழ்க என்றபடி இகழ்ச்சி உடலின் காம வெப்பம் மிகுந்தவள் என்னும் நிலையால் கூறப்பெறுவது.

எதிர்ப்படு ஞான்றும் - தலைவன் களவுக் காலத்து தன் எதிர் வந்து தோன்றிய பொழுதும்

விழிமுகம் கவிழ்ந்த- விழியும் முகமும் நாணத்தால் கவிழ்ந்து கொண்டன.

வதிந்த காலும் - கற்புக் காலத்துத் திருமணம் கொண்டு வாழ்கின்ற இப்பொழுதும்.

நானுறக் குனிந்த- நாணம் மேலேறும்படி அவை குனிந்தன.

இனைத்தும் காண்டிலை - இற்றை அளவிலும் கண்டதில்லை.

அம்ம - நொதுமலுக்குரிய பொது விளி

நொதுமல் உறவும் பகையுமல்லாத ஒரு தொடர்பு நிலை முன்பே தோழி என்னும் உறவு பூண்டிருந்தால் அவளுக்குத் தலைவியின் குறிப்பு தெரியுமாகையால் இவ்வினா அவள் கேட்டிரான் பகையெனினும் இக்கேள்வி எழற்கு இடமில்லை; ஆகையான் நொதுமல் என்று கருதி, அதன் குறிப்பாக அம்ம என்னும் பொது விளி தோன்றிய தென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/228&oldid=1209036" இலிருந்து மீள்விக்கப்பட்டது