பக்கம்:நூறாசிரியம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205

நூறாசிரியம்

தலைவனின் புறவொழுக்கமும், அவன் மேல் உள்ள பழியும், அவன் மேல் இவள் வைத்த அன்பும் நம்பிக்கையும் தெளிவாகப் புலப்படுகின்றன.

எள்ளாடு செக்கர் - எண்ணெய்க்காக எள் ஆடுகின்ற செக்கையுடைய செக்கர்.

நெய்கழி ஈமென்று - நெய் கழிந்த எச்சத்தை பிண்ணாக்கைத் தனக்குத் தருவர் என்று கருதி நெய்கழி. பிண்ணாக்கு

உள்ளத்து உவப்பின் -உள்ளத்தெழுகின்ற மகிழ்ச்சியொடு.

ஓங்கு தியில் எருத்தம் - உயர்ந்த திமிலை உடைய எருது.

ஒய்யென் ஒசைக்கு - செக்கு ஆடுதலினால் எழும் ஒய் என்னும் ஓசையினுக்கு (செவி தந்து)

உறங்கியாங்கு உலவரும் அவ்வோசையைக் கேட்டபடி கண்களை மூடியவாறு துரங்குவது போல் அச்செக்கைச் சுற்றி வரும்.

செய்யூர் - வயல்களையுடைய செய்யூர் என்னும் பெயரிய ஊரைச் சார்ந்த,

கொண்டல் - மருத நிலத்தலைவன். (மேகம் போன்ற தலைவன். கொண்டல் மழையைக் கொண்டுவரும் மேகம்)

மெய்யிலானெனினும்.....தோழி - எனக்குத் தான் எங்குச் செல்கின்றான் என்னும் மெய்யை உரைக்காது (பிறள் ஒருத்தியிடம்) சென்றான் எனினும், ‘வருவேன்’ என்று கூறிவிட்டு போனபடி வருவான்; அவன் பொய் வழங்கிலான், தோழி! என்றவாறு.

‘அவன் சென்றவிடத்தை எனக்குக் கூறிலன் ஆகையால் அவன் மெய்யில்லாதவன் ஆயினும், அவன் பொய்யும் உரையான் ஆகையால், வருவேன் என்றுரைத்தபடி வருவான்’ என்று நம்பிக்கையுடனும் அன்புடனும் கூறினாள் என்க.

தொய் குழல் - நெய்யில்லாது அவிழ்ந்து பரந்த என் கூந்தல்.

நெய்விப் பெய்யும் ... உண்டே! - நெய்யும் பூவும் ஒருசேரப் பெய்து கொள்ளும் நாளும் ஒரு நாள் உண்டு; அதுவரும் என்றாள் என்க.

இதில், நாளும் ஒன்று உண்டு என்றதால் உறுதியும், பொய் வழங்கிலனே என்றதால் அன்பும், மெய்யிலான் என்றதால் சினமும், கொண்டல் என்றதால் அவன் தன்க்குக் காலத்தாலும் இடத்தாலும் பொழிதல் இலாதவன் எனக்குறித்த ஏக்கமும், அவனின் ஊர் செய்யூர் என்றதால் அவனின் விளைவு சான்ற செல்வ நிலையும், அவ்வயல் போல் தான் அவன் பொழிவுக்கு ஏங்கி நின்ற காதல் குறிப்பும் குடும்ப நோக்கமும் புலப்பட உரைத்தாள் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/231&oldid=1209044" இலிருந்து மீள்விக்கப்பட்டது