பக்கம்:நூறாசிரியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45 வினவுதி ராயின் ...


யாண்டுசில வாக நரையுள வாகுதல்
யாங்கா குதியென வினவுதி ராயின்
பூண்டவென் மனைவியோ மாண்டமைந் தில்லாள்
ஆண்டொன் றீன்ற மக்களும் அறிவிலர்
ஒன்றுரை வினையொன் றுழப்பர் இளையரும் 5
மன்றறந் திறம்பியது எமையாள் அரசும்
ஆன்றோர் நெஞ்சம் அழலத் திரிதரும்
இறந்த ஒழுக்கினார் எள்ளுரை
நிறைந்த ஊர்யான் நெருங்கிய ஊரே!

பொழிப்பு:

கழிந்த யாண்டுகள் சிலவேயாக, நினக்கு நரை வந்து ஆகியது யாங்ஙனம் ஆயினை என வினாவுவீராயின், யான் இல்லறம் பூண்ட என் மனைவியோ பெருமை பொருந்திய குணங்களொடு அமைந்திலள் ஆயினள்; ஆண்டுக்கு ஒன்றாக அவள் ஈன்று தந்த எண்ணில் மிகுந்த என் மக்களும் அறிவிலராக வாய்த்தனர். ஒன்று உரையாக, வினை ஒன்றாகச் செய்து, என் துணையாளரும் எனக்குத் துன்பம் விளைவிப்பர் ; மன்ற அற முறைகள் திரித்து வேறுபட்டது, எங்களை ஆள்கின்ற அரசும்; இவையன்றிச் சான்றாண்மை நிரம்பியவர் உள்ளங்கள் கொதிப்புற்று வருந்தும்படி, எவ்விடத்தும் வீணே திரிந்து கொண்டிருக்கின்ற ஒழுக்கம் தவறியவர்களின் வாயினின்று வெளிப்படும் எள்ளத்தகுந்த இழிவுரைகள் நிறைந்து கேட்கின்ற ஊர் யான் நெருங்க இருந்து வாழும் ஊரே!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இளையோன் ஒருவன் நரை வாய்ந்தானாக, அவனை 'நீ யாங்ஙனம் இவ்விளமைப் பொழுதிலேயே நரை வந்து வாய்க்கப் பெற்றனை' என்று வினாவிய முதியோர் ஒருவர்க்கு அவன் விடை கூறுவதாகப் பாடப் பெற்றதிப் பாடல்.

இது புறநானூற்று 'யாண்டு பலவாக'என்னும் பிசிராந்தையார் பாடலை நினைந்து அதற்கு மறுதலையாகப் பாடப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/233&oldid=1209050" இலிருந்து மீள்விக்கப்பட்டது