பக்கம்:நூறாசிரியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

208

    பொந்தியகையற்றுக் கவல் நிறைந்த வாழ்க்கை இளமையிலேயே நரையைத் தோற்றுவிக்கும் என்னும் உளவியலை அடியொட்டியது இது.
    ‘யான் மணம் பூண்ட என் மனைவியோ மாண்பு அமைதல் இல்லாதவள் ஆயினள்; எனவே இல்லறச் சிறப்பின்மையால் என் மனங்கவன்று ஏறுபோல் பீடு நடை குன்றிக் குமைந்தேன். ஆண்டுக் கொன்றாக அவள் பயந்த மக்கள் பலருள் ஒருவரேனும் அறிவறிந்தவராக வாயாமற் போயினமையால், பெறத்தக்க பேறின்றி நெஞ்சம் அழன்றேன். என் வினைவாழ்க்கையிலோ, என் துணையாளரும் பணியாளரும் யானொன்றுரைக்க, அவர் அக் குறிப்பறியாது, நின்ற நெடுமரம் போல், வினையொன்றியற்றிப் பாடுகெடுப்பாராகலின் மனம் உழன்றேன்; இனி, என்னையும் எம்மையும் ஆள்தற்கு வந்து வாய்த்த அரசோ, அவையத்து அறமுறை திரிந்து மாறி நடக்கும் அரசாக அமைந்ததாகலின், அதுபற்றியும் அறிவு கனன்று கடுந்துயருற்றேன். இனி, இவையனைத்தும் ஒருபுறங்கிடக்க, சான்றோர் நெஞ்சம் கொதிப்புற்று வருந்தும்படி என்றும் எவ்விடத்தும், முனைப்பும் வினைப்பாடும் முற்றத் துறந்தாராய் இளைஞரும் பிறரும் இறந்து பட்ட ஒழுக்கமும் பண்பும் கொண்டு, தத்தமக்குள் பிறர் எள்ளத்தகுந்த இழிவுரைகளும் பழியுரைகளும் ஆடக் கொண்டோராக ஊர்வலம் வரும் நெரிசல் மிக்குடைய ஊரின் கண்ணே வந்து வதியலுற்றேன் ஆயினேன். பின் என்னை, எனக்கு இவ்விளமைக்கண்ணே முதுமை வந்தாற்போலும் தலை நரை காணாது போகுமோ கண்டேன், என்றானாக, ‘என்னை? நினக்கு இளமை நரை பூண்டது’ என்று வினாவியவர்க்கு உரை தந்தான் என்க.
    யாண்டு சிலவாக- நினக்குக் கழிந்த ஆண்டுகள் சிலவே ஆக (நின் அகவை (வயது) குறைவாக இருக்க)
    நரையுள வாகுதல் - நினக்கு நரை உளதாக இருத்தல். 
    யாங்கு ஆகுதி - யாங்கன் ஆகினை. 
    என வினவுதிராயின் - என வினவுவீர் ஆயின் 
    பூண்ட என் மனைவியோ-யான் மணம்பூண்ட என் மனைவியாகியளே. 
    மாண்டு அமைந்தில்லாள்-மாட்சிமையற்று அமைவில்லாதவள் ஆகினள்.
    ஆண்டு ஒன்று ஈன்ற மக்களும் அறிவிலர் - ஆண்டுக் கொன்றாக அவள் ஈன்று தந்த மக்களும் அறிவறியா மக்களாயினர்.
    ஒன்று உரை வினை ஒன்று - உரைத்தது ஒன்றாகச் செய்வது ஒன்றாக
    உழப்பர் இளையரும்- என் வினைக்கென வந்து வாய்த்த எனக்குக் கீழாயினோரும், மனத்துயர் தருவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/234&oldid=1410868" இலிருந்து மீள்விக்கப்பட்டது