பக்கம்:நூறாசிரியம்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

நூறாசிரியம்

திண்மையானது; மறவனுடைய வளைந்த கையின் அம்பைவிடக் கூர்மையானது; அவனின் நீண்ட குறியின் இலக்கை விட நேரானது: புலவரின் தடையில்லாத கற்பனை மடுவினும் ஆழமானது; கொடை மேவிய அருள் நெஞ்சத்தை விட முழுதும் மிகுந்த கனிவுடையது; மதநீரைப் பெருக்கி, தன் முரசு போன்ற தலையை நிமிர்த்துப் பெருத்த கால்களை அசைத்து வந்த பருமையும் கூர்மையும் சான்ற மருப்புகளை உடைய ஆண்யானையைப் போரிட்டு வீழ்த்திய வரிப் புலியை விடத் துணிவானது! வளையல்களனிந்த நினது கை, குலத்தால் ஏற்பட்ட பிரிவுணர்வைக் குலைத்துச் சிதைத்தது; அதன் மலர்ச்சியுற்ற தலையை வெற்றிக் காப்பிட்ட நின் கால்கள் மிதித்துத் தோய்த்தன; அதன் இழிவான நோக்கத்தை, அனலை கக்கும் நின் இரண்டு விழிகளும் எரித்துத் தீய்த்தன; குலப்பிரிவால் நேரவிருந்த பழியை உன் பண்பு சான்ற உள்ளம் துடைத்து நீக்கியது! சிவந்த கால்களையுடைய நாரையைப் போல், அமைந்திருந்து உன் குறியாகிய கணவனைப் பற்றிக் கொண்டனை ; உன் துணிவு வியப்பை உடையது, சான்றோர்கள் பக்கத்துப் பொருந்திய உள்ளமும் அவ்வுள்ளத்துத் தோன்றிய உயர்ந்த வினைப்பாடுகளில் பிடிப்புற்ற நல்லுணர்வும், என்றும் தாழ்வில்லாதபடி அமையப் பெற்றவனின், பருத்த தோளை, இதுதான் நமக்குற்ற வாழ்வு என எண்ணி அதனை இறுகப்பற்றி மணந்து கொண்டனை: (அதனால்)

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

குலப்பிரிவை மதியாது, கலப்பு மணம் புணர்ந்து கொண்ட தலைவியின் துணிவையும் முனைவையும் வியந்து பாராட்டித், தோழி வாழ்த்தியதாகும் இப்பாட்டு.

புன்மையோர் அமைத்த குலப்பிரிவுணர்வுகளுக்குக் குமுகத்தின் எத்திறத்தாரும் கட்டுப்பட்டு அடங்கி, அவற்றைத் துணிந்து விலக்காது, மணவினை முதலிய மங்கல வினைகளில் அப்பிரிவு மேற்கொண்டு வாழ்வு நடத்துகையில், தலைவி அப்பிரிவுணர்வை எதிர்த்து நின்று, தான் விரும்பிய காதலனையே மணந்து பொருந்திய நிகழ்ச்சியைத் தோழியொருத்தி வியந்து பாராட்டி வாழ்த்திப் பாடியதாகும் இது.

அக்குலப் பிரிவு மதர்த்துப் பொங்கி ஊரை அலைக்கழிக்கும் யானை போல்வது; அதைத் தன் துணிவால் புலியைப் போல் முறியடித்துப் பொருதி, வீழ்த்தினாள் என்கிறாள் தோழி.

முதற்கண், தோழி தலைவியின் காதலை வாழ்த்திப் பின்னர் அதன் தூய்மை நலன்களைக் கூறி மகிழ்ந்து, அதன்பின் அவள் அக்காதல் வெற்றி பெறுவதன் பொருட்டு, அதற்குத் தடையாயிருந்த குலப்பிரிவைப் போராடி