பக்கம்:நூறாசிரியம்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாவலரேறு பெருஞ்சித்திரனார்

212

பொருதியதைச் சுட்டி வியந்து அடுத்து, அதுவரை அவள் அமைதியாயும் உறுதியாயும் இருந்ததைப் பாராட்டிப் பின் அவளின் காதலனின் பெருமை கூறி உவந்து, இறுதியில் அவள் பெற்ற வெற்றி வாழ்வை போற்றிக் கூறினாள் என்க.

அம்ம! - கேட்பித்தற் பொருளில் வரும் விளி. நீ கேட்பாயாக!

வாழி தோழி - நீ பெற்ற மணவாளனுடன் என்றென்றும் தோழியே, நீ வாழ்வாயாக!

நின் காதல்....பெரிதே- நின்னுடைய காதல் திறம் இவ்வளவு பெரிய உலகத்தைப் பார்க்கினும் மிகப் பெரியது.இயற்கையின் தோற்றமாகிய இவ்வுலகின் இயக்கமும், அதன்கண் நின்று நீடும் உயிர்களின் வாழ்க்கைத் தொடரியக்கமும் மாந்தர் அறிவுணர்வுக் கெட்டாத ஆற்றல் சான்றன. ஆனால் அவற்றினும் நின் காதல் யாராலும் கணித்துக் கூற முடியாத பேராற்றல் வாய்ந்ததாகலின், அஃது இவ்வுலகினும் பெரிது ஆகின்றது.

பொழிந்த விசும்பின் தூய்தே - மழை முகில் கட்டியிருந்து, மழையாக அறப் பொழிந்த பின்னர் உள்ள கலங்கமற்ற வானத்தைப் போலும் நின் காதல் துய்மையானது.

தூய்மைக்குக் கலங்கமற்ற வானத்தை உவமையாகச் சொன்னாள் வெறுந் துய்மையான வானம் என்னாது, நிறைந்து மழை பொழிந்த பின்னர் உள்ள மாசற்ற வானத்தை உவமை கூறியது, அதன் குளிர்மையும், அகற்சியும், உயர்வும் கருதி என்க. மேலும் நீலவானம் அன்பின் பெருக்கிற்கு ஒர் அடையாளமும் ஆம். மழை பொழியாத வானம் வறட்சியும் களங்கமும் உள்ளதென்க.

கதிரின் செவ்விது - சிறிதும் கோட்டமில்லாத ஒளிக்கதிரைப் போலும் செப்பமானது.

மணியின் காழ்த்தது - உறுதியில் வயிரமே வலிதாகலின் அது போலும் வலியது என்றாள்.

பணியின் தண்ணிது - பனியைப் போலும் குளிர்ச்சி மிக்கது.

அறவோர்....அகன்றது - அறம் செய்வோர் நெஞ்சினும் அகற்சி சான்றது. அறவுணர்வு உடல், உயிர்க் கட்டுகளைத் தாண்டி அன்பாக விரிந்து, அருளாகப் படர்ந்து நிற்பதாகலின் அகற்சிக்கு அதனை உவமித்து, அதனினும் அகன்றது என்றாள்.

நெறியின்....திண்ணிது - நெறிப் படத் துறந்தவர் தம் உள்ளத்தினும் உறுதி சான்றது. நெறிப்படத் துறவாதார் உள்ளம் உறுதியிழக்குமாதலின் நெறிப்படத் துறந்தார் உள்ளத்தை உவமை கூறினாள் என்க. என்னை?