பக்கம்:நூறாசிரியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



213

நூறாசிரியம்

‘நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வார்’ என்றாராகலின்,

மறவன்....கூரிதே வில்லாண்மை வல்ல மறவனின் வளைந்த கையில் உள்ள அம்பை விடக்கூரியது. தான் கொண்ட குறி தப்பாமல் சென்று தைப்பதற்கு அம்பு கூரியதாக அமைய வேண்டுவது போல, தலைவியும் அவள் கொண்ட காதல் குறியாகிய காதலனைச் சென்று சேர்வதாகிய அவள் அன்புணர்வும் மிகக் கூரியதாகும் என்றாள். இனி, அதனினும் கூரியது என்றது அம்பு தைப்பது ஒரு பருப்பொருளையோ, ஒரு அஃறிணைப் பொருளையோ என்றிருக்க, இவன் அன்புணர்வாகிய அம்பு தைத்துப் பற்ற வேண்டுவது ஒரு மாந்த உயிரையும், அதன் நுண்பொருளாகிய உள்ளத்தையும் ஆகலின், அதனினும் கூர்மையானது இதுவென்றாள் என்க.

அவன்றன் ..... நேரிதே- அவன் தான் கொண்ட நெடுவதாகிய குறிக்கு எய்யும் அம்பு செல்லும் வழியினும் நேரானது. அம்பு செல்லும் வழி மிக நேராக அமைவதாகலின் அதனினும் நேரானது என்றாள். என்னை? அன்புணர்வு அவ்வம்புக் குறியினும் நெடிது பாய வேண்டியிருப்பதால், செலவு நோக்கியும் தொலைவு நோக்கியும் அதனினும் நேரிது என்றாள் என்க.

புலவர்....ஆழ்ந்தது - புலவர் தம் தடையில்லாத கற்பனை என்னும் ஆழமான மடுவை விட ஆழமானது. தலைவியின் காதல் உணர்வு புறத்தோர் எளிதே உணரவியலாத அளவிற்கு மிக ஆழமானது என்று குறிப்பிடவேண்டி, அதற்கு ஈடாகத் தடையில்லாத கற்பனை வளஞ்சான்ற புலவர் தம் ஆழமான உணர்வை எடுத்துக் கூறி, அதனினும் ஆழமானது என்றாள். தடையற்ற கற்பனை உணர்வு மேம்பட்ட புலவர்க்கே கைவரப் பெற்றதாகும் என்க.

கொடையருள்....கனிந்தது - கொடையுணர்வு சான்ற அருள் நெஞ்சினும் முழுமையாக மிகவும் கனிந்த உணர்வுடையது. கொடை உள்ளஞ்சான்றவர் தம் புற உடைமைப் பொருள்களையே பிறர்க்கு ஈகஞ்செய்யும் அருள் உணர்வு கொண்டவராய் இருப்ப, இவள் தன்னையும், தன் உயிரையுமே தன் காதலன் பொருட்டு ஈந்தாளாகலின், அவர்தம் உணர்வினும் இவள் காதல் உணர்வு மிகவும் கனிவுடையது என்றாள் என்க.

நிணநீர்ப் பெருக்கி - உணர்வெழுச்சியால் மத நீரைப் பெருக்கி.

முரசுத்தலை செருக்கி - முரசு போலும் திரண்டு பருத்துள்ள தலையை நிமிர்த்தவாறு.

பனைக்கால் அலைத்த - பருத்த கால்களை அலை போலும் அசைத்துக் கொண்டு வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/239&oldid=1209081" இலிருந்து மீள்விக்கப்பட்டது