பக்கம்:நூறாசிரியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாவலரேறு பெருஞ்சித்திரனார்

214

பருங்கூர்ங் கோட்டின் களிறு - பருத்த கூரிய மருப்புகளையுடைய ஆண் யானையை.

வீழ்த்திய வரியினும் துணிந்ததே - (அத்தகைய ஆண் யானையைப்) போரிட்டுக் கொன்று வீழ்த்திய வரிப்புலியை விடத் துணிவானது (நின் காதலுணர்வு) என்றாள் என்க.

ஈண்டு ஆண்யானையும் அதன் மதர்ப்பெழுச்சியும் சாதி வேறுபாட்டு உணர்வுக்கு உருவகமாகக் கூறப்பெற்றன. குமுகாயத்தில் மக்களிடை வேரூன்றிக் கிடக்கும் சாதியுணர்வானது, ஒரு மதம் பிடித்துத் தலை செருக்கிக் கால்களை அலைக்கழித்து வரும் ஒர் ஆண் யானை போல்வது. அவ்வுணர்வு அடங்கியிருப்பது போல் இருந்து, அவ்வப்பொழுது எழுச்சி கொள்வது, யானையிடத்து அடங்கியிருந்து அவ்வப்பொழுது எழுச்சி கொள்ளும் மதம் போல்வது. மதம்-வெறி. தலை செருக்குதல் என்பது அச்சாதியுணர்வால் பெருமை கூறிச் செருக்குதல். பனைக்கால் அலைத்தல் என்பது, அச்சாதியுணர்வால் பிற அன்பு, அறம், ஒப்புரவு போலும் மென்மையும் உயர்வும் சான்ற நல்லுணர்வுகள் மிதிக்கப் பெற்று நிலை குலையுமாறு அலைவுறுத்தல் என்றபடி பருங்கூர்க்கோடு என்பது, பெருமையும் ஆரவாரிப்பும் வன்மையும் கொண்ட சாதி அடையாளங்கள். களிறு என்று சாதியுணர்வை, ஆண் யானையாக உருவகித்தது, பெண்கள் இயல்பாகவே அச்சாதிப் பிரிவுகளைப் பொய்யாக்கும் கலவைக் கூடலுக்கு இசைந்தவர்களாகையால், ஆண்களாலேயே அச் சாதிக்கட்டு வலிப்பெற நின்றது என்பான் வேண்டி என்க. வீழ்த்துதல்-போரிட்டுத் தோல்வியுறச் செய்தல் அழித்தல்.

தலைவியை வரிப்புலியாக உருவகித்தது, சாதி வேறுபாடுகளுடன் அவள் பொருத எழுச்சியையும் முனைப்பையும் காட்ட வேண்டி என்க. ஓர் ஆண் யானையின் எழுச்சியை விடப் புவியின் சீற்றம் வலிதோ என்பார், ‘யானைவெரூஉம் புலிதாக்குறின்’ என்னும் கருத்தை ஓர்க.

இனி, அவ்வ்ரிப்புலியினும் துணிவானது இவள் காதலுணர்வு என்றது, அவ்வரிப்புலி தன்னைக் காத்துக் கொள்ளவே, அவ்வியானையை எதிர்த்துப் போரிட்ட நிலையில், இவள் தன்னோடு தன் காதலனையும், காக்கவும் மீட்கவும், யானையினும் வலிதாகிய அச் சாதிப் பாகுபாடுகளுடன் புலியினும் துணிவாகப் போரிட வேண்டியிருந்ததால் என்க.

குலந்தரு....வளைக்கை - குலங்களால் ஏற்படுத்தப் பெற்ற உயர்வு தாழ்வெனும் பிரிவுணர்வை நிலைகுலையும்படி செய்தது வளையல்களனிந்த நின் கை.

அலர்தலை....அணிகழல் - சாதிகளின் மலர்ச்சியுற்ற தலையை இனி மலர்ச்சியுறாதவாறு, மிதித்துச் சிதைத்தது, கழல் அணிந்த நின் கால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/240&oldid=1209070" இலிருந்து மீள்விக்கப்பட்டது