உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
47 முன்றில் வேங்கை

முன்றில் வேங்கை முடக்கிளை நரலோ
டொன்றி யழைத்த ஒருவழி தானும்
இன்றே துணித்தனர் இனியே
மன்றொன் றுண்டே மருவயெந் தோளே!

பொழிப்பு:

இல்லத்து முன்புறம் உள்ள வேங்கை மரத்தின் வளைந்த கிளை (இன்னொரு கிளையுடன் உராய்ந்து ஒலிக்கும் ஒசையோடு ஒசையாகப் பொருந்தி (தலைவியை, நீ விளித்து) அழைத்து, (இது நாள் வரை பழகிய) ஒரே ஒரு வழியினையும், இன்று(அம் மரத்தை வெட்டித் துண்டித்து விட்டனர் (வீட்டார்). இனி, எம்தோளை மருவுவதற்கு மன்றல் ஒன்றுதான் உண்டு.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

இரவுப் பொழுதில் தலைவியுடன் வந்து பழகிய தலைவனிடம், 'நீ, இனி அவ்வாறு பழகுதல் இயலாது; எனவே மணந்து கொள்; என்று தோழி கூறியதாக அமைந்ததிப் பாட்டு.

“வீட்டின் முன் உள்ள வேங்கை மரத்தினது ஒரு கிளை முடம் பட்டு வளைந்திருந்ததால், அது வேறொரு கிளையுடன் மோதிக் காற்று வீசும் பொழுதிலெல்லாம் அக்கிளையுடன் உராய்ந்து ஓர் ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த ஒசையுடன் இணைந்து தலைவியை விளிக்கும் அழைப்போசையைச் செய்ததால், இதுவரை பிறர் அறியாவாறு அவளும் வந்து கொண்டிருந்தாள். நீயும் அவளுடன் கூடி மகிழ்ந்து கொண்டிருந்தாய். ஆனால் இன்று பகலில், வீட்டினர் அம்மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டனர். இனி உன் அழைப்போசையுடன் இணைந்து ஒலித்த அக் கிளையினோசை எழாது. எனவே தலைவியை நீ அழைக்கவும் இயலாது. அழைப்பின், வீட்டினரும் கண்டு கொள்ளலாம். ஆகவே, இனி நீ இரவில் இவ்விடம் வராதே தலைவியின் தோளை நீ மருவி மகிழ வேண்டுமாயின், நீ அவளை மணம் செய்து கொள்ளும் வழிதான் ஒன்று உண்டு; அதைச் செய்"என்று, இரவில் தலைவியைப் பார்க்க வந்த தலைவனிடம் தோழி அறிவுறுத்துகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/243&oldid=1251255" இலிருந்து மீள்விக்கப்பட்டது