உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219

நூறாசிரியம்

48 மொய்துயி லொன்றாம்

கையனை யாக மெய்வெளிக் கிடத்திப்
பெய்பணி போர்த்திய பெற்றி யோர்க்கும்
புனைநார்ப் பின்னிய புல்லடுக் கத்து
வினைநாட் கலைந்து வீழ்ந்துருள் வார்க்கும்
மெய்யுறுத் தில்லா மெத்தெனப் பஞ்சின் 5
தொய்யுட் சேக்கை துவட்டி யோர்க்கும்
மொய்துயி லொன்றாம் போலச்
செய்வினை பலவாச் செறுவிளை வொத்தே!

பொழிப்பு:

கையையே தலைக்கு அணையாக வைத்து உடலை வெட்ட வெளியிற் கிடத்தி, பெய்கின்ற பனியையே போர்வையாகப் போர்த்து உறங்கும் தன்மையோர்க்கும், புனையப் பெற்ற நாளினால் பின்னியதும், மூங்கிலைக் கொண்டு கோத்துக் கட்டப்பெற்றதுமான கட்டிலில், வினைமிகுந்த நாளுக்கென அலைந்து, ஓய்வின்றி வினையாற்றிக் களைத்து, அயர்வை நாடி, விழுந்து உருண்டு புரள்வார்க்கும், மேனி உறுத்தலில்லாத மெத்தென்னும் பஞ்சால் பொதியப் பெற்றதும், தொய்வுடையதுமான படுக்கையில் படுத்து, அது துவளும்படிஅயர்வார்க்கும்,மொய்த்துவருகின்ற தூக்கம் ஒரு தன்மையுடையதாக இருப்பது போலவே, இவ்வுலகத்துச் செய்யப் பெறுகின்ற வினைகள் பலவாக இருப்பினும், அமைகின்ற விளைவு மக்கள் துய்ப்பு என்னும் ஒரு தன்மை நோக்கியதாகவே இருக்கின்றது.

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலகத்துள்ள பலரும் பலவாறான வினைகளில் ஈடுபட்டு தம் வானாளைப் போக்குகின்றனர். வினைகளின் தொடக்கமும் நடப்பும் முடிவும் பல்வேறு வகையாகின்றன. ஆனாலும் அவற்றின் பயன் முழுவதும் மாந்தனின் துய்ப்பு என்னும் ஒரு விளைவுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றது. எந்த வினையும் அவன் துய்ப்புக்காகவே செய்யப் பெறுகிறது. எனவே, உலக வினைகளின் முடிவு மாந்த உயிரின் துய்ப்பு என்று முடிவாகின்றது. இந்த உயரிய அரிய மெய்ப்பொருள் உண்மை இங்கு ஒர் உவமையால் விளக்கப் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/245&oldid=1209063" இலிருந்து மீள்விக்கப்பட்டது