பக்கம்:நூறாசிரியம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

223

என்னிடத்துக் கேட்டீரே” என்று வெகுண்டுரைத்தான். இவ்வகைத்தான உலக நாகரிகத்தின் இவ்விழிந்த போக்கினை என்னவென்று எடுத்துரைப்போம்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

கல்விக் கழகத்துப் பயிலும் ஆண்மகன் ஒருவன், தன்னை ஒரு பெண்ணைப் போல் புனைவு செய்து கொண்டு புறம் வந்ததையும், அவன் தன் இளமைக்குரிய வாலை நிலைகள் திரிந்து, முதுமை நிலைக்குரிய தன்மைகளைப் பெற்றிருந்ததையும் நன்கு புலப்படுத்துவான் வேண்டிக் கூறியதாகும் இப்பாடல்.

கல்வி பயிலும் இளைஞர் தம் ஆண் தன்மைக்குரிய வகையில் ஒப்பனை செய்து கொள்ளாமல், பெண்ணியல்புக்கான வகையில் தம்மைப் பலவாறு தோற்ற உடைகளால் சுவடித்துக் கொள்ளும் இழிநிலை இயல்புகளைப் பகடி செய்ததாகும் இது.

நாகரிகம் என்னும் பெயரால் இளைஞர் தம் நடைமுறைகளால் சீரழிவுற்றுச் சிதைந்து வருவதைக் கண்டித்ததும் ஆகும் இது.

இளைஞன் ஒருவன் பெண் போலும் முகமா பூசி, பெண்கள் அணியும் பூவண்ணத் துணிகளில் உடையுடுத்துப் பெண்ணென மயங்குமாறு நீள் முடி வளர்த்து, பல்வேறு எண்ணத் திரிபுகளால் தன் இளமை நழுவ முதுமைச் சாயலுற்றுத் தோன்றினன். அவனைப் பெண்ணென மயங்கி, ‘அம்ம, நீ வாழ்க விரைவில் திருமணமும் பெறுக’ என வாழ்த்தியும், அவன் அதற்கு நானுறாமல், நீவிர் கண்ணொளி கெட்டீர் போலும், நான் பெண்ணல்லன்; ஆணே யாகும் என வெகுண்டுரைத்தான். அது கேட்டு, ‘இவ்வுலகின் இழிநிலைப் போக்கு என்னே’ என்று வருந்தியுரைக்கின்றதாக அமைந்ததிப்பாடல்.

அம்ம, வாழியோ - அம்மா, நீ வாழ்வாயாக,

மன்றல் ஆகுமதி - திருமணம் ஆகுமாக பெண்போலும் தோற்றமுற்றிருந்த அவனை, அவள் என்றெண்ணி, நல்லெண்ணத்தால் வாழ்த்துவர். மன்றல் மன்றினில் நடைபெறும் திருமணம்.

மூப்பெதிர் நிற்கும் ஒருத்தி மணவணி காணாது நிற்கின்றாளே என்று வருந்தி, அவளுக்கு விரைவில் திருமணம் ஆகுக என்று வாழ்த்தினார் என்க.

மூப்டெதிர் கொளா நின் யாக்கை - முதுமைக் காலத்தை எதிர் கொளா நின்ற நின் உடல் எதிர் கொளா நிற்றல் - எதிர் கொள்ளல். மூப்புக்காலம் விரைவில் வந்துறுமாறு நின்ற உடல் என்றபடி உடல் மூப்புக் கொள்ளும்படி இருந்தும், இன்னும் திருமணம் கொள்ளாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/249&oldid=1209056" இலிருந்து மீள்விக்கப்பட்டது