பக்கம்:நூறாசிரியம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

நூறாசிரியம்

நன்றி வாயால் சொல்வதினும் உள்ளத்தால் நினைக்கத் தக்கது என்றும், அதுவும் உவந்து நினைக்கத்தக்கது என்றும் பொருள் கொள்வான் வேண்டி என்க.

கற்றல் நனியிலர் - இனி, கல்விச் சிறப்பால் பெருமையுறுவோரும், அதுவழி புலவர் நெஞ்சத்துப் புக்குப் புலவளங் கொள்வாரும் இலர் என்றவாறு,

உள்ளம் செவ்விலர் - உள்ளச் செப்பம் வாய்ந்தாரும் இலர் என்றபடி என்னை, உள்ளச் செப்பம் வாய்த்த விடத்து வாழ்வின் அனைத்துச் செப்பங்களும் நிறைவுற அமையுமாகவின், அத்தகையோரையும் காணாத நிலையில் அவரைப் பாடுதற்கும் இயலாது போயிற்றென்க.

ஊருயும் பாடிலர் - ஊர் மக்கள் உய்யும் படியாகப் பாடாற்றுவார் இலர் என்றபடி தூய பொதுநலவுணர்வுடன் குடி செய்ய வல்ல நடுநிலையும் ஈகவுணர்வும் உடையவர்கள் இருப்பின், அவரை ஊக்குவிப்பான் வேண்டி அவர்தம் பொதுத் தொண்டைப் பாராட்டிப் பாட வியலும், ஆனால் அத்தகையோரும் இலராயினர் ஆகையின், அவரையும் பாடற் கியலாது போனதென்க.

கள்ளத்து முதலா - கள்ளத்தையே தம் வாணிக முதலாக வைத்து.

களவு ஊதியத்து களவுப் பொருளையே ஊதியமாகக் கொள்ளுகின்ற.

பொய்ம்மை வாணிக - பொய் வாணிகஞ் செய்யும்.

போலி வாழ்வினர் - போலித்தனமான வாழ்க்கை நிலைகளை உடையவர்கள்.

இக்காலத்து உள்ளவர்தம் வாழ்வு நிலையை அனைத்து வகையினர்க்கும் பொருந்துமாறு கூறியது.

கள்ளத்தையே அடிநிலை வாணிக முதலாக வைத்துப் பொய்யையே வாணிகஞ் செய்து, களவு கொண்ட பொருள்களையே ஊதியமாகக் கருதி மகிழும் போலி வாழ்க்கையை உடையவர்கள். இவர்களை எங்ஙன் பாடுவது என்று கவன்றது.

மெய்யறு சமயத்து- மெய் நெறிகள் அற்றுப் பொய் நெறிகள் மலிந்த மதங்களைக் கொண்டதும்.

சாதி மீட்பிலர் - சாதிச் சகதியில் விழுந்து மீட்க வியலாத இழிவு நிறைந்ததும் ஆகிய

வெய்ய புன்குழாம் - வெய்தாகிய புன்மை நிறைந்த மக்கள் கூட்டம். வெய்துகொடியது. வெம்மையும் புன்மையும் நிறைந்த மாந்தக் கும்பல்.

வீழ்ந்து- வீழ்தலுற்று. அழிந்து போய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/254&oldid=1209134" இலிருந்து மீள்விக்கப்பட்டது