பக்கம்:நூறாசிரியம்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

நூறாசிரியம்


மொழிக்கென வெழுந்தார் இவர்பிற ரிலரே! 60
பழிக்கென நின்றோன் இவன் பிற னிலனே!
மயர்தீர் கொள்கைச் சான்றோர் அழுங்க
உயர்செந் தமிழ்க்கே உறநின் றாரை
வெய்வேட் டெஃகம் விதிர்ப்பறத் தாங்கிக்
கொய்துயிர் துணித்தது கொலையோன் கோலே! 65

புன்றலைச் சிறாஅர் செந்நீர் ஆடியோன்
முந்நிற நெடுங்கொடி முன்றிலும் சிதைக!
அன்னோன் தாங்கிய அரசுஞ் சிதைக!
முற்றா இளவுயிர் தமிழ்க்கெனப் போக்கி
வற்றா நெடும்புகழ் வழிவழிக் கொண்ட 70
இளையோர் காத்த எந்தமிழ்
கிளையுறப் பொலிக குலைவிலா தினியே!

பொழிப்பு

(1-12) போர் செய்யப் புறப்பட்டதற்கு அடையாளமான தும்பைப் பூவை இவர்கள் குடியிலர், இடையிலே கைவாள்களையும் செருகியிலர்: போர் செய்யப் போவோர் உடுத்தும் வெள்ளை உடைகளையும் உடுத்தியிலர் கொல்கின்ற வேல்களையும் ஏந்திலர், பெரிய முரசங்களை ஆர்த்திலர் போர் தொடங்குவதற்குரிய இடத்தையும் பொழுதையும் இவர்கள் அமைத்துக் கொண்டார்களில்லர். கயிற்று வடங்களைப் பிணித்த பிணிப்புகளை அறுத்துக் கொண்டு, இடங்கள் நலியுமாறு நடக்கின்ற மதங்கொண்ட களிறுகளைப் போல் இவர்கள் தம் கால்களில் வெற்றிக் கழல்களைப் பூண்டாரல்லர். இவர்கள் வேந்தரின் அவைக்குள் நுழைந்தும் இலாதவர்; போர் நுணுக்கங்களை கூறுவதற்கென யாக்கப்பெற்ற நூல்களையும் இவர்கள் அறிந்தவரல்லர் பூத்த மலர் போலும் இளமை முகங்களில் ஒளி சிந்துகின்ற கண்களும், முத்துப் போலும் அரும்பியிருக்கும் வெயர்வைத் துளிகள் சேர்ந்த நெற்றியும் சிவக்க, கொள்கை முழக்கங்களை பொறித்த கொடிகளைத் தோள்களில் தாங்கி வெற்றி யொன்றையே விரும்புவோராகி, வானம் அதிரும்படி, அனைவரும் சூழ்ந்து நின்று, கொள்கைகளை முழக்கித் தமிழ்த்தாயின் மானம் காக்கும்படி எழுந்து விட்டனர். இவர் காண்!

(13-16) இளமைத்தலை முதிராத உடம்பையுடையவர்கள் இவர்கள். முகத்தில் குறுமயிர் அருப்பம் கொள்ளாத இளமையினோர் இவர்கள். பால் நாறும் முகம் மாறாத பச்சை இளந்தையராகி, நூல்களில் முகம் பதிப்பதன் பொருட்டுப் பள்ளிக்கண் விடப்பட்டவர்கள் ஆவர். இவர்கள்.