பக்கம்:நூறாசிரியம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

நூறாசிரியம்

எனக் கொள்கை முழங்கிய உறத்துரைக்கு, ஈரமும் குளிர்ச்சியும் உடைய இவ்வுலகமும், இருள் நீண்ட விசும்பும் ஆகிய இரண்டையும் அன்பளிப்பாகக் கொடுப்பினும் அவை தகுந்த நிறைவாக இரா. ஆயினும், ஒரு பொருளும் ஈயாதவனாகினும் ஒழிக. மாந்த உயிர்களைக் கொன்றும் அடங்கிடாமல் சாவையே பசியாகக் கொண்டு, கருவிகளில்லாமல் வெறுங்கையராக நின்ற, இப் போராட்ட நடையினோரை முழுவதும் விளையாமல் நின்ற இளைய பருவத்தினர் தம்மை, மலர் மொட்டுகளைச் சிதைத்து நெருப்பிலிடுதல் போல் உலர்ந்த பொருளில் பற்றுகின்ற தீயைப் போன்ற கொடுமையுற்ற நெஞ்சையுடையவன் உயிர்களை வாங்கினான்.

(58-65) நீராடிய அன்னிமிஞிலியின் நறுவிய உயிரைத் தின்ற கேடு சான்ற நன்னன் என்னும் அரசனும், இவ்வினைக்கு நானுவான் ! தமிழ்மொழி காப்பதற்கென்றே எழுந்தவர்கள் இவர்களைத் தவிர வேறு இலர்; அது போல் பழிக்கெனவே நின்றவனும் இவனைத் தவிர, (தமிழ் வரலாற்றில்) வேறு எவனும் இலன். மயக்கம் தீர்ந்த கொள்கையையுடைய சான்றோர் வருந்தும்படி, உயர்ந்த மொழியாகிய செந்தமிழுக்குத துணையாகி நின்றவரை, கொடிய வேட்டெஃகத்தை நடுக்கமுறாது தாங்கி உயிர் கொய்து உடலைத் துண்டு செய்தது கொலையவனின் கொடுங்கோல்!

(66-72) இளந்தலைமை உடைய சிறுவர்களின் குருதியில் குளித்தவனின் மூன்று நிறப்பேராயக் கட்சிக் கொடியும் அரண்மனை முன்றிலும் சிதைத்தொழிக. அன்னவன் தாங்கிய அரசும் சிதைந்தொழிக! முற்றாத இளவுயிர்களைத் தமிழ்மொழிக்கெனவே போக்கிய வழி, வற்றாத நெடிய புகழை வழி வழியாகக் கொண்ட இளைஞர்கள் காத்த எம் தமிழ்மொழி பல கிளைகளும் மல்கிக் குலைவுகள் இலாது இனிப் பொலிந்து விளங்குக.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலக வரலாற்றிலேயே மொழிக்கென வெழுந்த முதற்புரட்சியும், தமிழக மறுமலர்ச்சி வரலாற்றின் திருப்பமும் ஆகிய 1965ஆம் ஆண்டு இந்திப் போராட்டத்திற் கலந்து செந்நீர் சிந்தி, விழுப்புண் ஏற்ற தமிழ் மறவர்கட்குப் பாடியது இப் பாடல்.

தும்பை குடிலர் - போரெழுச்சிக்கு அடையாளமாகிய தும்பைப் பூவை அணியாது முனைந்த மாணவர் எழுச்சியைக் கூறியது. தும்பைப் பூவைச் சூடாது போருக்கெழுந்தனர். இவர் என்றது.

இடைவாள் செருகிலர் - தம் இடைகளில் வாள்களைச் செருகி யில்லர். மொழிப் போராகலின் கருவி தவிர்த்தலைக் கூறியது.

வெண்கலை உடுத்திலர்- போர்க்கென் றெழுவார் வெள்ளிய ஆடையை உடுத்தல் மரபு வெளிராடை அற்றைப் போர்ச் சீருடை போலும். அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/260&oldid=1209136" இலிருந்து மீள்விக்கப்பட்டது