பக்கம்:நூறாசிரியம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

நூறாசிரியம்


இனி, குலைவிலாது கிளையுறப் பொலிக - இனிமேல், எவ்வகைக் குலைவுமிலாது, கிளைமொழிகளை ஊன்றி மேன்மேலும் பொலிவுற்று விளங்குக.

- இது வாழ்த்து!

- 1938-இல் சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்புப் பேராயக் கட்சியினர் கைக்கு வந்தது. அக்கால் முதலமைச்சராக விருந்த திரு. இராசகோபாலாச்சாரி (இராசாசி) 'இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன்’ என்று தெரிவித்தார். அதையடுத்துத் தமிழகத்தில் இந்தி யெதிர்ப்புணர்வு தொடங்கி வலுப்பெற்றது. அக்கால் பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் உயர்திரு மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கோ. துரைசாமி (G.D.Naidu), பாகநேரி காசிவிசுவநாதன், ஈழத்துச் சிவானந்த அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள், பெரியார் ஈ.வெ.இராமசாமி, அண்ணாத்துரை, சண்முகவேலாயுதம், சிடிநாயகம், தமிழவேள் உமாமகேசுவரன், சச்சிதானந்தம், தூத்துக்குடி மாசிலாமணி, சாமி சகசானந்தா, அருள் தங்கையா, பாரிப்பாக்கம் கண்ணப்பர், முத்தையா, பரவிசுநெல்லையப்பர், சற்குணர், இராபிசேது. வச்சிரவேல், பிடிஇராசன், செளந்தரபாண்டியன், சாத்துார் கந்தசாமி, ஏ.டி.பன்னிர்செல்வம். காசுப்பிரமணியனார், கருமுத்து தியாகராசன், பண்டுவர் தருமாம்பாள், மூவாலுர் இராமாமிர்தத் தம்மையார், சென்னை மலர்முகத்தம்மையார், சரசுவதி சிற்சபை, கந்தம் உரோசம்மாள், சரோசினி மாணிக்கவாசகம் (மறைமலையடிகள் மூத்த மருமகள்) கோபிசெட்டிப் பாளையம் மாரியம்மாள், மறை திருநாவுக்கரசு, பரவத்து இராசகோபாலாச் சாரியார், கே.எம். பாலசுப்பிரமணியம், டிஏவிநாதன், கே. இராமையா, பாலசுந்தரப் பாவலர், எசுசம்பந்தம், பல்லடம் பொன்னுசாமி, மீனாம்பாள் சிவராசு முதலிய அறிஞர்களும், கட்சித் தலைவர்களும், துறவிகளும், பெரியோர்களும் ஆகப் பலர் எதிர்த்து அறிக்கைகள் விட்டும், மாநாடு நடத்தியும், போராடியும், மறியல்கள் செய்தும், சிறை சென்றும், அடிதடி பட்டும் இந்தித் திணிப்பை எதிர்த்து நின்றனர்.

இப்போராட்ட எதிர்ப்பால் இந்தி நுழைப்பு ஒரேயடியாகத் தீராமல், சிறிது சிறிதாகவும், மெல்ல மெல்லவும், தமிழகத்தில் காலூன்றியே வந்தது. அக்கால் வெளிவந்த செய்தித்தாள்கள் பலவற்றுள்ளும், இந்தி யெதிர்ப்புத் தொடர்பான கட்டுரைகள், பாடல்கள், அறிக்கைகள், தீர்மானங்கள் அனைத்தும் வெளிவந்தன. ஆனால் இந்தி படிப்படியே நுழைக்கப் பெற்றே வந்தது. இடையிடையே இந்தியெதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப் பெற்றும் பயனில்லை.

இறுதியாக, 1965 சனவரி 25ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தி யெதிர்ப்புணர்வு வெடித்தது. இப் போர் பிப்ரவரி 12ஆம் நாள் வரை தீவிரமாக நடந்தது. அக்கால் பேராயக் கட்சி தமிழகத்தில் அரசு வீற்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/266&oldid=1221121" இலிருந்து மீள்விக்கப்பட்டது