பக்கம்:நூறாசிரியம்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

நூறாசிரியம்


வீரங்கொண்ட நெஞ்சையுடைய பெருமகனாகிய அரசேந்திரன் என்னும் மாணவன் தான் கொண்ட கொள்கை வெற்றி பெறும்படி, தன்மேல் வந்து தாக்கிய எஃகுக் குண்டுகளைத் தாங்கி, அதனால் உயிர் பிரிந்து வீழ்ந்த அந்த பொழுதிலே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

முதிராச் சிறுமொழி இந்தி முனிந்து, முத்தமிழ் காக்க முன்னின்று, வேட்டெஃகம் தாக்கி வீழ்ந்த, அண்ணாமலைப் பல்கலைக் கழக அரசேந்திரனைப் பாடியது, இது.

இந்தியெதிர்ப்பில் உயிர் நீத்த அரசேந்திரனையும் அவன் வீரச் செயலையும், கேட்டபொழுது, சான்றோரும், முதியோரும், ஆடவரும், அன்னையரும், இளையோரும், பாவையரும், உழையோரும், காவலரும் அழுங்கலாகவும், ஆற்றிலராகவும், இரங்கலாகவும் என்னென்ன கூறி வருந்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

‘இத்தகு வீறுமிக்க ஒரு வீரம் பொருந்திய செயலை நாம் நம் வாழ்நாட்கண் செய்ததில்லையே’ என்று சான்றோர் ஆற்றாமையால் வருத்தினர்.

முதியவர்கள் 'இத்தகைய வீரன் ஒருவனை நாம் மகனாகப் பெறுதற்குத் ‘தவம் செய்ய வில்லையே’ என்று மனம் நொந்து கூறினர்.

‘இவன் போலும் ஓர் ஆண்மகனை நாம் பெறாமற் போனோமே என்று ஆடவர்கள் புலம்பிக் கொண்டனர்.

‘இத்தகைய வீரன் ஒருவனுக்கு நாம் தாயாக வில்லையே’ என்று அன்னைமார் மனம் வருந்தினர்.

‘இன்னவன் ஒருவனுடன் நாம் உடன் பிறந்திலமே ‘ என்று இளைஞர்கள் வருந்தினர்.

‘இவனைக் காதல் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டிலையே என்று கன்னிப் பெண்கள் கலங்கினர்.

இவனுடன்.தோழர்களாக நாம் இருந்தும், இவ்வீரச்செயலுக்கு நாம் முந்திக்கொள்ளவில்லையே’ என்று அவன் தோழன்மார் நெஞ்சம் நைந்தனர்.

‘ஐயகோ, இத்தகு ஒரு மறவனை நாம் கொன்றுவிட்டோமே! நாம் சற்றுப் பிந்தி வந்திராமற் போனோமே! அக்கால் இவன் அடிபட்டுச் சாகாமல் இருக்க வாய்ப்பேற்பட்டிருக்குமே ! என்று காவலர்களும் பலவாறு பித்துப் பிடித்தவர் போலும் வாயரற்றிக் கொண்டனர்.

-இவ்வாறு பலரும், அவ் வீரமகனாகிய அரசேந்திரன், இந்தி மொழிப் போரில் குண்டடிபட்டு உயிர் துறந்தபொழுது, பலவாறாக எண்ணி, உரைத்துத் தம் வருத்தத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்றவாறு என்க.