கவுள்நனை வேழம் கணைபட் டாங்கு
செயிர்வுமே லோங்கிய கல்விச் செவ்வியர்
ஒருதலை மாமணி உகுத்தோன் பெயர்ந்த
மனைமுகத் தவன்றணி ஈட்டங் குவித்து
முழங்கு விறற்பறை முருக மூட்டும் 5
அழற்போல் வெவ்வெரி அடரக் கொளுத்திய
காட்சி கண்டோர் தமிழ்கண் டோரே
பூட்கை அறிந்தோர் தமிழறிந் தோரே!
பொன்றிய தமிழ்ச்சீர் புதுக்கி மலர்த்தும்
மாணவர் அறவினை மகிழார் 10
கோணை அரசியல் கொள்கையி னோரே!
பொழிப்பு :
கசிகின்ற மதநீரால் கதுப்பு (கன்னம்) நனையப் பெற்ற ஆண் யானை, எய்த அம்பினாலும் குத்துப்பட்ட விடத்து, அடங்காச் சினம் மேலெழும் தன்மையில் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்) கல்வி பயில வந்த மாணாக்கர்கள், தங்களுள் ஒருவனாகிய தலைமைத்திறம் பொருந்திய சிறந்த ஒளி மணி போன்ற வீரன் அரசேந்திரனைச் சுட்டு வீழ்த்தச் செய்தோனாகிய கழகப் பதிவாளன், (முன்னரே அஞ்சித் தன் வாழிடமாகிய மனையைத் துறந்து புறம் போகிய பின்னை, அம் மனையின் முன்றிலில், (அவன் உள்ளே விட்டுச் சென்ற மனைப்பொருள்களாகிய) சிறப்புடைய ஈட்டங்களை (கதவை உள்ளே சென்று, கொண்டு வந்து போட்டுக்) குவித்து, தொடர்ந்து முழங்குகின்ற வெற்றி முரசம், (ஈரத்தால் தளர்வுற்று முழக்கொலிகுறைய, அதனை மீண்டும் விறைப்பேற்றுதற் பொருட்டுத் தீக் கொளுவிக்காட்டி) முருகுவிக்க முட்டுகின்றதழல் போல் வெம்மை மிகுந்த எரியினை அடர்ந்து எரியும்படி கொளுத்தி மூட்டிய அக் காட்சியைக் கண்டவர்கள்தாம், (அவர்கள் சினந்து போராடுவதற்குக் காரணமாக விருந்த தமிழ் மொழியின் சிறப்பினை, அவ்வுணர்வின் வழி) உண்மையில் கண்டவர்கள் ஆவார்கள்; அவர்களின் உறுதிப்பாட்டை (இவ் வகையான செயல் வழி நேரில் கண்டு) அறிந்தவர்கள் தாம், (அவர்களின் எழுச்சிக்கு அடிப்படையாக விருந்த தமிழ் மொழியின் சிறப்பினை உண்மையிலேயே அறிந்தவர்கள் ஆவார்கள்.