பக்கம்:நூறாசிரியம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57 எம்மாண் மகனே!


இவனியா ரென்குவீ ராயி னிவனே
தாறலை பாகர் தந்துயர் பொறாஅது
ஊறுதக நினைக்கும் உயவல் யானை
கையுகத் தறைந்து கால்தலை நெறிக்கு
மெய்யே போலும் பொய்சேர் கொற்றம் 5
வழங்குமொழி உவப்ப இலங்கில் வறுமொழி
பாரிப் புடன்று நூறப் புக்க
கொலைகோற் காவலர் குறிகொள் எஃகம்
அதிரப் படர்ந்தா ராக
எதிர்தலைப் பட்ட எம்மாண் மகனே! 10


பொழிப்பு:

இவன் யார் என வினவுவீராயின், இவனே, தம் கைகளில் உள்ள கோட்டியினால், தன்னைத் துன்புறுத்தும் யானைப்பாகரின் துயரத்தைப் பொறுத்துக் கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தியவர்க்குத் தானும் துன்பம் செய்ய மிகுதியும் கருதுகின்ற மதங் கொண்ட யானை, தன் தும்பிக்கையை நீட்டி அவரை எடுத்துக் கீழே அறைந்து, தன் காலில் அவர் தலையை நசுக்கிச் சிதைக்கின்ற உண்மையைப் போல, பொய்யே நிறைந்த அரசு, முன் வழக்கில் உள்ள தமிழ்மொழியைக் குழப்புகின்ற நிலையில் சிறப்பில்லாத எளிய மொழியாகிய இந்தி மொழியை வளர்த்துப் பரப்புவதை எதிர்த்துப் போராடி அழித்திட மாணவர்கள்) முயல, (அவர்களைத் தடுக்குறும் நோக்கத்துடன்) கொலையுறச் செய்யும் கோலைக் கொண்ட காவலர்கள், குறிவைத்தவாறு வேட்டெஃகம் தாங்கி, அஃது அதிரும்படி கட்டுக்கொண்டே பரந்து வந்தாராக, அவர்கள் முன் எதிர்ந்துபோய் இறந்துபட்ட மாட்சிமை பொருந்திய எம் ஆண்மகனே!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகமாணவன் இளங்கோ மருந்தகத்துத் துஞ்சினானாக, அவனை யாரென விளித்த அயலார்க்கு அவன் நற்றாய் சொல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/289&oldid=1221152" இலிருந்து மீள்விக்கப்பட்டது