பக்கம்:நூறாசிரியம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

நூறாசிரியம்


59 மருட்கை யதுவே!


மலைமென் னெஞ்சே! மருட்கை யதுவே!
குலையுங் குடரும் விதுப்புற் றனவே!
தமிழ்தோய் உளத்துத் துணிவீ தென்கோ
வேந்துமுன் ஒச்சிய விறலி தென்கோ
வளமான் தோன்றல் இளமை என்கோ 5
அலைபுலை கொற்றத்து விளைவி தென்கோ
உலைவூங் குயிரின் உவகை என்கோ
ஆடுநெய் யொழுக முச்சியி னப்பிப்
பாடுவெள் ளருவி பாய்தல் போலும்
கன்னெய் முழுகிக் கனல்புகுந் தாடிய 10
செஞ்சிக் கோட்டத்துத் தேவனுார்ச் செம்மல்
பொய்யுடல் கருகிப் புறமாறி
மெய்யுடற் கொண்டு மிளிர்ந்த செயலே!


பொழிப்பு:

திசைக்கும் என் நெஞ்சம்! வியப்புக்குரியது அது! நெஞ்சாங்குலையும் குடலும் நடுக்கமுற்றன. தமிழ் உணர்வு தோய்ந்த உள்ளத்தின் துணிவு, இஃது என்று சொல்லுவமா? அரசின் முன் ஓங்கி நின்ற வெற்றிச் செயல் இஃது என்று சொல்லுவமா? பெருமைக்குரிய குடியில் பிறந்த ஒருவனின் இளமைச் செயல் என்று சொல்லுவமா? துன்புறுத்தலும் புன்மைச் செயல்களும் உடைய அரசின் அடிப்படையில் விளைந்த செயல் இஃது என்று சொல்லுவமா? துன்புற்ற உயிரின் விடுதலை மகிழ்ச்சி என்று சொல்லுவமா? ஆட்டிய எள் நெய்யை, வழிந்து ஒழுகும்படி தலையின் உச்சியில் தேய்த்துக் கொண்டு, இசைக்கின்ற வெள்ளிய அருவியில் பாய்தல் போலும், கன்னெய்யை (பெட்ரோலை) உடல் முழுதும் ஊற்றிக்கொண்டு, நெருப்பில் குளித்து ஆடிய, செஞ்சிக் கோட்டத்துள்ள தேவனூரைச் சேர்ந்த வீரன், கோடம்பாக்கத்தின் முச்சந்தியில், தன் பொய்யுடலை கருக்கிக் கொண்டு, உயிர் வெளியேறி, மெய்யான புகழுடலை வாழ்விடமாகக் கொண்டு. ஒளியாய் விளங்கி நின்ற செயலே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/298&oldid=1221456" இலிருந்து மீள்விக்கப்பட்டது