பக்கம்:நூறாசிரியம்.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

நூறாசிரியம்

தமிழொடு சிறந்து இருந்தனை -என்றும் உள்ள தமிழ்மொழியுடன் பிறர்போல் அழிவுறாது சிறப்புற என்றும் நீ இருந்தாய் கொல்.

‘எல்லாரும் வழக்கமாக வாழ்ந்து, ஒரு சிறப்பும் பெறாமல் இயல்பாக மறைந்தொழியும் வாழ்க்கை போல் நாமும் வாழ்ந்து மடிய வேண்டுமோ? என்று ஏற்படும் இழிவுக்கு அஞ்சியவனாகத் தமிழ்மொழிக்கெனப் போராடித் தீக்குளித்து மாய்ந்தனன் கொல்லோ, தேவனுர்ச் செம்மல் சிவலிங்கம்? 'அவன் புகழ் தமிழ் உள்ளளவும் சிறந்து நிற்கும்’ என்பதாகும் இப்பாடல்.

இதில் ஒரு மாந்தன் பலவாறான சிறப்புகளொடு வாழ்ந்தாலும், பலவகையினும் துய்ப்புச் செய்து இன்பம் பெற்றாலும் இறுதியில் அவன் வாழ்க்கை, எவ்வகைச் சிறப்பும் இன்றி எல்லாருக்கும் ஏற்ற இயல்பான முடிவே பெறுகிறது. எனவே இயல்பாக மாய்ந்தொழியும் வாழ்க்கைக்கு ஒரு சிறப்புத் தேடுவது, அதனை ஒரு கொள்கையோடு முடித்துக் கொள்வதே ஆகும் என்னும் உயர் நோக்கத்தை வலியுறுத்தி இந்தி மொழித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்மொழிக்கெனத் தன் உயிரைத் தீக்குளித்து மாய்த்துக் கொண்ட சிவலிங்கத்தை முன்னிருத்திப் பாடியது இப்பாடல்.

உயிர் நிலையாமையும், உடல் அழிவும் நன்கு புலப்படுத்திக் கூறப்பெற்ற இப் பாடலில், இறப்புக் காலத்து நேரும் சாவுக் குறிகள் விளங்கக் காட்டப் பெற்றுள்ளன.

விக்கல் மேலுறுதலும், மூச்சு முட்டுதலும், நா வறண்டு போதலும், உரை திக்குவதும், பேசுதற்குத் திணறித் தொல்லைப் படுதலும், உண்டது கக்கலும், உள்ளே செரித்துப் போனது தன்னுணர்வின்றியே நீர்மலமாய்க் கழிவதும், அவற்றின் ஒலியாரவாரமும், கண்கள் ஒளி குன்றுவதும், தப்பித்தவறி எழுந்தால் நடை தடுமாறுவதும், எனவே நகர்வதும் இயலாதவிடத்துக் கிடப்பதும், பருவுணவு கொள்ளவியாலாமையும், கொண்ட நீர்ம உணவும் உள்ளே செல்லாமல் புறக்கடை வாய்வழி வெளியே ஒழுகுவதும், வெள்ளை விழி மேலேறுதலும், அறிவு மறைவதும், ஆவி மெதுமெதுவாய்க் கழிவதும் ஆகிய சாவின் படிப்படியாக நிகழும் இறுதி நிகழ்ச்சிகள் நன்கு புலப்படுத்தப் பெறுகின்றன.

இவையன்றியும், இயல்பாக, எல்லார்க்கும் வந்து நேரும் வாழ்விலும் சாவிலும் என்ன சிறப்புள்ளது? உயிரை ஒரு கொள்கைக்காக இழப்பதில்தான் சிறப்பு உள்ளது என்னும், உயர் நோக்கம் இடம் நோக்கிச் சுட்டப்பெற்றது என்க.

இப்பாடல் முன்னது திணையும்,தழற்குளியல் என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.