பக்கம்:நூறாசிரியம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

281

இவன் மூமகார் - இவனுடைய மூன்று மக்கள்.

வடவர் திணித்த வளராமடமொழி - வடநாட்டு ஆட்சியினர் தென்னாட்டு மக்கள் மேல் திணித்திருக்கும், வளர்ச்சியுறாத மூடமொழி அறிவாற்றல் இல்லாத மொழியாகிய இந்திமொழி,

கடியத் துணிந்து - (இந்தி மொழித் திணிப்பைக்) கண்டித்துத் தடுத்து நிற்கத் துணிவு கொண்டு,

காட்சியின் காட்ட - தன் உணர்வைக் காட்சியளவாகச் செயலில் காட்டுதற்கு

உடலம் தீக் கொள- உடலில் கன்னெய் (பெட்ரோல்) ஊற்றிக் கொண்டு தீப்பற்றும்படி செய்து,

உயிர் தீந்தமிழுக்கு என-- தன் உயிர் தமிழுக்காகவே இருந்தது; இக்கால் அதற்குத் தீங்கு வந்ததால் அதற்காக அது மாய்ந்தது என எண்ணும்படி

குரிசில் - சிறந்த வீர மகன்; ஆண் மகன் தலைவன்.

விருகாம்பாக்கத்து அரங்கநாதன்-சென்னையில் உள்ள விருகாம்பாக்கம் என்னும் ஊரில் தோன்றிய அரங்கநாதன் என்னும் பெயரினன்.

தன் இளம் மனைவியையும், மூன்று மக்களையும் பொருட்டென நினையாது, இந்தித் திணிப்பால் தமிழ்மொழிக்கு நேர்ந்த தீங்கையே பெரிதென நினைந்து, அத் தீந்தமிழ்மேல் தான் கொண்ட பற்றினைக் காட்டுதற்கும், இந்தித் திணிப்புக்குத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துதற்கும், “உடலைத் தீயினுக்கும், உயிரைத் தம்ழ்க்கும் தந்தேன்” என எழுதி வைத்துவிட்டு, தன்மேல் கன்னெய்யை ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, மாய்ந்து போன, விருகாம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன் என்னும் வீரனைச் சுற்றியிருந்தார் கேட்கப் பாடியதாகும், இப் பாடல்.

இப் பாடல் முன்னது திணையும், கன்னெய்யாடல் என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/307&oldid=1209156" இலிருந்து மீள்விக்கப்பட்டது