பக்கம்:நூறாசிரியம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

நூறாசிரியம்

கெடா அது நிறுத்தும் சிறார் - தமிழ்நாட்டை அகப்புற அழிவுகளால் சிதைந்து போய்விடாமல், அதன் பெருமையைக் காத்து நிற்கும் இந்திப் போராட்ட இளைஞர்.

இந்திப் போராட்டக் காலத்து இது நடந்தமையாலும், அப் போராட்டதுடன் தன் தானும் ஒருவனாய் நின்று, இவன் உயிர்துறந்தது நிகழ்ந்தமையாலும், ஈண்டுச் சிறார் என்றது இந்திப் போராட்ட இளைஞரைக் குறித்தது.

செற்றலர் எதிரின் கிளையொடு பொருதும் அற்றைநாள் தமிழர் - பகைவர்கள் தமிழ்நாட்டின் மேற் போர் தொடுப்பாராகில், தமிழருள் நிலத்தால் வேறுபட்டிருந்த அனைத்துக் கிளையினரும் ஒன்றாய் இணைந்து, பகையை எதிர்த்துப் போராடும் இனவுணர்வு வாய்ந்த முன்னாளைய தமிழர்

போலாது இழிந்த- (அவர்களைப்) போல் அல்லாமல் அறியாமையாலும் அடிமைத் தன்மையாலும் தாழ்ந்து இழிந்து நிற்கின்ற.

இற்றைநாள்மாக்கள்-இன்றைய நாளில் உள்ள, இனநலனும், மனநலனும் மானநலனும் திரிந்த மக்களைப் போன்ற மாக்கள் - விலங்குகள்.

அறிந்தும் - தம் மொழி இன, நாட்டு நலன்களையே காத்துக் கொள்ளாமல் அடிமையாகிவிட்ட இவர்களா போராட்ட வீரன் ஒருவனின் பெண்டு பிள்ளைகளைக் காக்கப் போகிறார்கள். ; மாட்டார்கள்’ - என்பதை நீ அறிந்து கொண்டிருந்தும்.

எமை விடுத்து - எங்களைத் தமியராக இவர்களிடையில் விட்டு விட்டு.

யாவர் காக்குமென் றெண்ணி - இவர்கள் இனத்துக் குரியவராகிய எங்களை, இவர்களையன்றி, வேறு எந்த இனத்தவர் வந்து காக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து.

திப்புகுந்து ஆவி துறந்தனை நீயே - கன்னெய்யால் கொளுவப் பெற்ற தீயினுள் நின்னுடலை அழியச் செய்து, ஆவியைத் துறந்து கொண்டினை, நீயே!

தமிழை மட்டுமே காக்கப் போராடிய நீ உன்னையே நம்பியிருக்கும் எங்களைத் தங்களையே காத்துக் கொள்ள இயலாத இவ்வினத்தாரிடையில் தமித்திருக்க விட்டுவிட்டு, நின் ஆவியை எரிப்புகுந்து மாய்த்துக் கொண்டனையே சொல், இனிமேல் எங்களைக் காப்பவர் யாவர்?’ என்று தன் மன இறுக்கத்தை அவிழ்த்து அவன் மனைவி அரற்றி அழுதாள்’ என்பதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது திணையும் துறையும் ஆம் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/310&oldid=1209160" இலிருந்து மீள்விக்கப்பட்டது