பக்கம்:நூறாசிரியம்.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

285

63 அன்னையும் மறந்தாள்

அன்னையும் மறந்தாள்; ஆயமும் மறந்தாள்;
இன்ன பண்பினன் இனையரு ளாளன்
என்றிவை தேராது தந்தையும் மறந்தாள்;
மற்றிவள் விழுமத்து மன்றுகொள நின்ற
சிற்றில் ஆடுஞ் சிறுமியும் மறந்தாள்; 5
கிளைகிளை வந்த வுறவு மெண்ணாது
இளையோன் பாங்கின் விளைவும் ஒராது
நெருநல் பாவைக்கு அறுவை உடுத்துச்
சிறுவெண் முத்தத்துத் தொடையல் சாற்றி
மறுகின் ஆடிய குறுநுதல் 10
பறந்திய சென்றது யார்கொளப் பயின்றே!

பொழிப்பு:

(மறத்தற்கே இயலாதவளாகிய தன்னைப் பெற்ற) அன்னையையும் மறந்தாள்; (தன்னொடு சேர்ந்து விளையாடுகின்ற தன் அகவையொத்த) தோழிகளையும் மறந்தாள் புறவுலகில் ஒருவனை இன்ன பண்பை உடையவன், இன்ன அருளாண்மை உடையவன் எனும் இம் மனவியல் கூறுகளைத் தேறவறியாத இவள், (அவ்வாறு தேறி இவளுக்குப் பொருந்தியவனை அறிவிக்கும் திறனுள்ள) தன் தந்தையையும் மறந்து போனாள் மற்றும், இவள் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளும் பெருமையினாலும் தன்மையினாலும், அடுத்துள்ள தன் மணவாழ்வை அமைத்துக் கொள்வதற்குத் தொடர்ந்து நிற்கின்றவளும், இக்கால் சிற்றில் கட்டி விளையாடிக் கொண்டிருப்பவளும் ஆகிய தன் தங்கையாகிய சிறுமியையும் இவள் மறந்து விட்டாள்.

வழிவழியாக வந்த உறவினர்களின் தொடர்புகளையும் எண்ணாமல் இவள் பின்பற்றிச் சென்ற இளையவனின் உறவால் தொடரப்போகும் விளைவுகளையும் ஆராய்ந்து பாராமல், நேற்று (என்னும் கால நிலையில்), (தான் வைத்துக்கொண்டு விளையாடிய ) மரப்பாவைக்கு, ஆடைகளை உடுத்தியும், சிறிய வெண்முத்துக்களால் ஆன மாலையினைச் சாற்றியும் தெருவில் ஆடிக்கொண்டிருந்த சிறிய நெற்றியை உடைய இவள், (வெளியூர்க்குத் தன் காதலனுடன்) பறந்து சென்றது யார் பயிற்றுவித்த பயிற்சியினால்?