பக்கம்:நூறாசிரியம்.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

298

இளம் பெண்டிர்கள் என்னும் வேறுபாடுகள் இல்லை : பாலியல் தாக்கங்களுக்குப் பின்னர் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இவற்றைத் தடுக்க முயற்சி செய்யும் ஆடவர்கள் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். இளைஞர்கள் அனைவருமே போராளிகள் அல்லது போராளிகளாக மாறக்கூடியவர்கள் என்னும் கருத்தில் படைத்துறைத் தங்கில்(முகாம்)களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அங்குள்ள தமிழர்களுக்கு மான அழிவும் உயிரழிவும் வாழ்வுச் சிதைவும் ஏற்படுவதால், அவற்றினின்று தங்களைக் காத்துக் கொள்ளக் கருதி, அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டியவர்களாக ஆகுகின்றனர்.

வானமும் நிலமும் நீரும் கடந்து - எனவே, தமிழர்கள் வானூர்தி வழியாக வான் எல்லையைக் கடந்தும், இயங்கிகள் பேருந்துகள் வழியாகவும், நடந்தும் தாக்கம் ஏற்படுகின்ற நிலப் பகுதியினின்று வேற்றிடங்களுக்குப் பெயர்ந்தும், கப்பல் வழியாகக் கடல் எல்லையைக் கடந்தும் அயல் நாடுகளுக்குச் செல்கின்றனர்.

கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து-அவ்வாறு செல்ல இயலாதவர்கள், நகரங்களில் நேரும் தாக்கங்களுக்கு அஞ்சித் தங்களைக் காத்துக் கொள்ளக் காடுகளில் ஒடி ஒளிந்து கொள்கின்றனர். அவர்களில் இளைஞர்களாகவும் ஆடவர்களாகவும் உள்ளவர்கள் போராளிகளுடன் சேர்ந்து, போராட்டக் களங்களிலும் சென்று சிதைபடுகின்றனர். நெரிந்து - நெருக்குண்டு - சிதைபட்டு உறுப்புகள் இழந்து உயிரிழந்து.

தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட- இவ்வகையில் அங்குள்ள தமிழர்களில் ஒவ்வொருவரும், அவர் அவர் குடும்பங்களும் இனமும் பலவகையிலும் இடர்ப்பாடுகள் எய்த

ஆயிரம் - ஈழத்தமிழர் - பல ஆயிரக்கணக்கில் இளைஞர்களும் பெண்டிரும், இவ்வாறு உலகம் முழுவதும் போய் ஏதிலியர்களாக நாடு நாடாகத் திரிந்து வருவதும், பல நிலைகளில் மாய்ந்து போவதும் ஆகிய நிலைகளில் உள்ள ஈழத் தமிழர்கள்.

இடையினில் தோன்றி - அவர்களில் தானும் ஒருத்தியாகத் தோன்றி.

காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை - வயிரம் போல் உறுதியான நெஞ்சுடைய, கன்னிப் பருவத்தின் மலர வேண்டிய, இளமை சான்ற மொட்டுப் போன்றவள்.

தன்னையும் இழந்து - இராசீவ் அனுப்பிய படைத்துறையினரால் தன் பெருமையை இழந்து - சீர்குலைவுவற்று.

தமரையும் இழந்த- தன் பெற்றோரையும் உற்றாரையும் அக்காவல் படையினரால் இழந்த, தமர்தம்மவர் பெற்றோரும் உற்றாரும்.