பக்கம்:நூறாசிரியம்.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

299

தானுவின் குடும்பத்தவர்கள் இந்திய அமைதிப் படையினரால் அழிக் கப்பட்டனர். தானுவும் அவர்களால் கொடுமையாகக் கற்பழிக்கப்பட்டவள். இந்தக் கொடுஞ் செயல்கள் தாம் அவளைப் பழிவாங்கும் உணர்வுக்குத் தள்ளின. எனின் அது மிகையாகாது.

அமைதிப் படையினர் இவ்வாறு தனக்கும் தன் குடும்பத்தினர்க்கும் மட்டுமல்லாமல் பல நூறு குடும்பங்களுக்கும் தீங்கு செய்தது, தானுவால் பொறுத்துக்கொள்ள முடியாத வல்லுணர்வை அவளுக்குத் தந்திருக்க வேண்டும்.

தன் உற்றார் உறவினர் உயிர் அழிவிற்கும், தன்னுடைய மான அழிவிற்கும், அமைதிப் படையினர் காரணமானவர்களாக இருந்தாலும், அவர்களைப் பழிவாங்குவது தனக்கு இயலாது எனக் கண்டாள், தானு. எனவே, அவர்களைத் தமிழீழத்திற்கு அனுப்பி வைத்து, இந்நிலையை உருவாக்கிய இந்தியத் தலைமையமைச்சர் இராசீவே முழுவதும் பழிவாங்கத்தக்கவர் என, தானு உறுதி கொண்டிருக்க வேண்டும்.

தனக்கு மட்டும் நேர்ந்த துன்பமாக இதைக் கருதாமல், தன்னைப் போல் உள்ள பலர்க்குமே நேர்ந்த துன்பமாக அவள் கருதியது அவளின் தாய்மை உணர்வை நினைவு கூர்வதற்கு உதவியது; எனவே, அவள் அன்னைக் குலத்தைச் சேர்ந்தவள் என்று நினைவு கூரவேண்டுவதாயிற்று.

அன்னைக் குலத்து ஒர் அறங்கூர் மறத்தி - பிறர் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் சிறப்புப் பெற்ற) தாய்மைக் குலத்துத் தோன்றிய, அறவுணர்வுகூர்தலுற்றுப் படிநிலை வளர்ச்சி பெற்று மறவுணர்வாக முதிர்ந்து நின்ற ஒரு மறத்தியாகிய தானு.

அறம்- மாந்தவுணர்வின் முதிர்ச்சியுற்ற பண்பாடு. மறம்.துணிவின் முதிர்ச்சி. இந்த இரண்டு உணர்வுகளும் மாந்த உயிரியக்கத்தின் ஆக்கத்திற்காகப் பயன் தருவன ஆகையால், இயற்கை உணர்வுகளாம். மறம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.

முரண்பாட்டுணர்வாக முகிழ்த்து, எதிர்ப்புணர்வாக வளர்ந்து, வீரவுணர்வாக மறுமலர்ச்சியுற்று, மறவுணர்வாக முதிர்வடைவது, மறத்தின் படிநிலை வளர்ச்சி. முதலிரு உணர்வுகளும் ஐயறிவுத் திணைகளுக்கும், இறுதியிரண்டு மட்டுமே ஆறறிவு மாந்தர்களுக்கும் உரியனவாக இருக்கின்றன.

வீரம், அறவுணர்வுடன் இணைந்து இயங்கும் பொழுது மறமாக விளங்கித் தோன்றுகிறது. இனி, அறவுணர்வே படிநிலை வளர்ச்சியுற்று மறமாக மாறுவதுண்டு. அக்கால் அவ்வுணர்வு செயற்கரிய வீரச் செயல்களைச் செய்யும். போர்க்களத்தில் வீரர்கள் ஒருவர்கொருவர் பொருந்திக் கொள்வது வீரவுணர்வாகவே கொள்ளப் பெறும் அறங் கலந்த வீரமே மறம் என்பதைத் திருவள்ளுவரும் ஒப்புவர்.