பாவலரேறு பெருஞ்சித்திரனார்
311
எனும் ஏழில் மன்னனின் இழிநிலை குறித்த ஒளவையார் பாடலிற் கண்டாங்கு ஈண்டு நறுந்தமிழ் பயிலா வெறுஞ் செவிகளை, அவற்றின் புன்மை தோன்றத் துளை என்றும், குறிக்கொண்டு கேளாது காதிற்பட்டன என்பார் புகுந்த என்றுங் கூறினார். இருமை ஒருமை பற்றிய ஈர் ஒரு என்னும் சிற்றெண்கள் அச்சொற்களின் சின்மை குறித்து நின்றன.
பிற சொல்லாவன ஆரியம், ஆங்கிலம் முதலிய பிற மொழிகளின் சொற்கள். விளங்கிக் கொள்வார் இல்லாதவிடத்தும் தம் உரையாட்டின் இடையிடையே பிறமொழிச் சொற்களை வெளிப்படுத்துதல் வரட்டுப் பெருமையும் போலி நாகரிகமும் கருதியும் நல்லறிவின்மையானும் என்க.
மேற் 'புகுந்த’ என்றமையின் ஈண்டுக் கிளத்தல் வெளிப்படுத்தல் எனப்பட்டது. பிறரை வலிந்தழைத்தும் தாம் முறையாகக் கற்றுத் தெளியாத புல்லிய சொற்களைப் பன்னிப் பன்னிப் பேசும் இயல்பு பற்றிக் கரைந்து என்றார். புல்லிய சொற்களாவன பொருட் சிறப்பற்றன.
கடுப்புற வல்லேம் யாஅம் என வலம் வரூஉம் : “யாம் வல்லமை யுடையேம்’ என வாய் நீட்டலும் குறிக்கோளின்றி ஊரைச்சுற்றி வருதலும் செருக்கு மிகுதியின் வெளிப்பாடுகளாம். கடுப்பு - செருக்கு வலம் வருதல் சுற்றித் திரிதல் என்னும் அளவாய் நின்றது.
யாஅம், வரூஉம் என்னும் அளபெடைகள் இசைநிறைத்தன வேனும் அவை நிரலே செருக்கும் வியப்பும் உணர்த்தி நிற்றல் நுண்ணிதின் உணர்க!
வெம்மார் மாக்களை...பெரிதே : கடப்பாடு உணராதும் கட்டுப்பாடு இன்றியும் பிறருழைப்பை யுறிஞ்சியும், அறிவுநலமும், பண்பாடும் நாகரிகமுமின்றியும், வீறாப்புப் பேசித் தருக்கித் திரிவார் கொடுமை வாய்ந்த கயவர்களாதலின் அவர்களை வெம்ஆர் மாக்கள் என்றார்.
மேல்'மகன்'என்றவர் ஈண்டு மாக்கள் என்றது. அத்தகையோர் தொகை மிகுதிபற்றி என்க! அவ் இழிதகையாளரை நம்மவர்கள் என்றாலும் அவர்கட்குச் சிறப்பாய் அமைதலின் விதந்து என்றார்.
மொழியுரிமையானும் இனச்சார்பு நிலச்சார்புகளானும் அவர்களை நம்மவர்கள் என்றல் எளிதில் தவிர்க்கவியலாமையின் நாணுகம் பெரிதே என்று மீண்டும் கூறினார்.
இப்பாடல் பொதுவியல் திணையும் முதுமொழிக் காஞ்சித் துறையுமாம்.