பக்கம்:நூறாசிரியம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

317


70 என்றுங் காண்குவம்


குன்றுசிர் வைத்த கொடையி லாளரைத்
தின்றுயும் பொருட்டுத் தேய்கா லோயச்
சென்று கேட்குநர் அல்லேம் யாமே
அன்றுநாட் கவளம் அலைந்துண் மாரை
ஒன்றும் பெறுவே மல்ல மாயினும்
என்றுங் காண்குவம் இனிதே நெடுங்கரைத்
தெண்ணீர் நனையடி யேறி யடர்த்த
தண்புற் சின்னிழல் தங்குவ தன்றிக்
கரிநிழல் மடங்கற் படுத்தல்
விரிநீர் உலகத் தியாண்டு மிலானே!


பொழிப்பு :

யாம் உணவுண்டு உயிர் வாழும் பொருட்டு, மலைபோலும் திரண்ட செல்வத்தை வைத்திருந்தும் வள்ளன்மைக் குணம் இல்லாதாரை, எம் தேய்வுற்ற கால்கள் சோர்வுறுமாறு தேடிச் சென்று அவரிடத்துப் பொருள் வேண்டுவே மல்லேம், அற்றைநாள் உணவையும் பாடுபட்டுத் தேடியுண்ணுபவரிடத்து யாம் ஏதும் பெறுவேம் அல்லேம் ஆயினும் அவரை; மனமகிழ்வொடு காண்பேம். நெடிய கரையையுடை யாற்றின் தெளிந்த நீரில் நனைந்திருக்கும் படுகையின் கண்ணே ஏறிச்சென்று செறிந்த குளிர்ச்சி பொருந்திய பொதும்பரின் சிறுநிழலில் தங்குவதல்லாது, கரிந்த மரநிழலின்கண் படுத்தல் பரந்த கடலாற் சூழப்பெற்ற இவ்வுலகின்கண் யாங்கணும் இல்லையாதலின்.

விரிப்பு :

இப்பாடல் புறப்பொருள் பற்றியது

பெருஞ்செல்வராயினும் வள்ளன்மைக் குணம் இல்லாரை யாம் தேடிச் செல்லேம். வறியராயினும் பண்புநலம் உடையாரை என்றும் காண்பேம் என்னும் உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்துவதாக அமைந்தது இப்பாட்டு,

குன்று சீர்வைத்த கொடையிலாளரை-மலைபோலும் திரண்ட செல்வம் பெற்றிருந்தும் வள்ளன்மைக் குணம் இல்லாதாரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/343&oldid=1221196" இலிருந்து மீள்விக்கப்பட்டது